Last Updated : 08 May, 2021 05:10 PM

 

Published : 08 May 2021 05:10 PM
Last Updated : 08 May 2021 05:10 PM

'கிராமப் பெண்களின் பொருளாதாரம் மேம்படும்' - நகரங்களுக்குத் தினமும் வேலைக்குச் செல்லும் பெண்கள் பாராட்டு

நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் செய்ய அனுமதித்துள்ளதால் கிராமப்புறப் பெண்கள், கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மேம்பட வாய்ப்புள்ளதாக பெண் பயணிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு உள்ளூர்ப் பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயண வசதி வழங்கப்படும் என திமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தமிழக முதல்வராகப் பதவியேற்ற நாளிலேயே இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார். அதைத்தொடர்ந்து உடனடியாக இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, மே.8-ம் தேதி (இன்று) முதல் பெண்கள் இலவசமாகப் பயணிக்கலாம் எனவும், இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான ரூ.1,200 கோடியை, அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் எனவும் அறிவிக்கப்பட்டது.

25 பேருந்துகளில் அனுமதியில்லை

அதைத் தொடர்ந்து கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்சி மண்டலத்தில் (திருச்சி, அரியலூர், பெரம்பலூர்) 415, கரூர் மண்டலத்தில் 129, புதுக்கோட்டை மண்டலத்தில் 139, காரைக்குடி மண்டலத்தில் 219, நாகப்பட்டினம் மண்டலத்தில் 117, கும்பகோணம் (தஞ்சாவூர், திருவாரூர்) மண்டலத்தில் 213 என 1,232 பேருந்துகளில் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் அனுமதிக்கப்பட்டது. திருச்சி மாநகரில் இயங்கக்கூடிய 25 எல்.எஸ்.எஸ் பேருந்துகளில் மட்டும் மகளிருக்குக் கட்டணமில்லாப் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.

வேலைக்குச் செல்லாமல் இருந்த நிலைமாறும்

துவாக்குடி அருகேயுள்ள மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஆலிஸ் சகாயராணி கூறும்போது, ‘திருச்சியிலுள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்து வரும் நான், வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று வர பேருந்து கட்டணமாக நாளொன்றுக்கு ரூ.60 செலவிட்டு வந்தேன். என்னைப் போலவே எங்கள் பகுதியிலிருந்து ஏராளமான பெண்கள் கட்டிட வேலை, உணவக வேலை, வீட்டு வேலைக்காகத் தினமும் திருச்சிக்குப் பேருந்தில் பயணம் செய்வர்.

அவர்களிடம் பயணச் சீட்டுக்குக் கூட பணமிருக்காது என்பதால், சில நாட்கள் வேலைக்குக்கூட செல்ல முடியாத நிலை இருந்தது. தற்போது அரசு இலவசப் பயணத்துக்கு அனுமதித்துள்ளது எங்கள் அனைவருக்குமே இது மகிழ்ச்சி அளிக்கிறது. கிராமத்திலிருந்து நகரத்துக்குச் சென்று பணிபுரியும் எங்களைப் போன்ற பெண்களுக்கு, குறிப்பாக கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தின் பொருளாதார நிலை மேம்பாட்டுக்கு இத்திட்டம் வழிவகுக்கும்' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x