

புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையின் முதல் ஆலோசனைக் கூட்டம் நாளை காலை நடக்க உள்ளது. முதல் கூட்டத்தில் நிதி, சட்டப்பேரவை கூட்டத்தொடர், கரோனா பரவல் உள்ளிட்ட பல அம்சங்கள் அலசப்படும் எனத் தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது. திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் வென்றவர்கள் 8 பேர் என்கிற நிலையில் 133 பேருடன் பெரும்பான்மை பெற்ற ஸ்டாலின், நேற்று முதல்வராக பொறுப்பேற்றார்.
ஸ்டாலினுடன் சேர்த்து 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இதில் 15 பேர் புதிய அமைச்சர்கள். அதிலும் நிதி, சுகாதாரத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உணவுத்துறை போன்ற துறைகளுக்கு அமைச்சர்கள் நால்வரும் புதிய அமைச்சர்கள். அமைச்சரவையிலும் பல்வேறு மாற்றங்களை ஸ்டாலின் புகுத்தியுள்ளார். நீர்ப்பாசனம், குடிமராமத்து உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை என்கிற அமைச்சரவையை உருவாக்கியுள்ளார்.
வெளிநாடுவாழ் தமிழர் நலன், பெண்கள் பாதுகாப்பு என பல அம்சங்கள் அமைச்சரவை துறைகளாக கொண்டுவரப்பட்டுள்ளன. முக்கிய துறைகள் இளையவர்கள் வசம் அளிக்கப்பட்டுள்ளதால் எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.
இந்நிலையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை கூட உள்ளது.
இந்தக் கூட்டத்தில் தமிழகத்தில் தற்போது முக்கியப் பிரச்சினையாக உள்ள கரோனா நோய்த்தொற்று, ஊரடங்கு குறித்து பேசப்படும். கரோனா பரவல், ஊரடங்கு, ஆக்சிஜன், தடுப்பூசி, கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள், மாநில நிதி நிலையின் மோசமான நிலை, அறிவிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள இட ஒதுக்கீடு வழக்கு உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் இந்தக்கூட்டத்தில் பேசப்படும் எனத் தெரிகிறது.