Last Updated : 08 May, 2021 03:23 PM

 

Published : 08 May 2021 03:23 PM
Last Updated : 08 May 2021 03:23 PM

உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நியமனம்: அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிந்தவர்

கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம்

கோவை

கோவையில் அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிந்தவரும், சட்டத்துக்குப் புறம்பாக செயல்பட்ட காவல்துறையினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தவருமான, கோவை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக பணியிடம் மாற்றப்பட்டார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னர், கோவை மாநகர காவல் ஆணையராக சுமித்சரண் பணியாற்றி வந்தார். இவர், அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம், கோவை மாநகர காவல் ஆணையர் பதவியில் இருந்து சுமித்சரண் அதிரடியாக தேர்தல் ஆணையத்தால் பணியிடம் மாற்றப்பட்டார்.

சென்னையில் கூடுதல் டிஜிபியாக பணியாற்றி வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் கோவை மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கை, கோவை மாநகர காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தின.

எஸ்.பி.வேலுமணி மீது வழக்கு

மேலும், ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிக்கு பதில், நேர்மையாக கோவையில் தேர்தலை நடத்த, கூடுதல் டிஜிபி அந்தஸ்த்தில் உள்ள டேவிட்சன் தேவாசீர்வாதம் மாநகர காவல் ஆணையராக தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டது, அப்போதைய ஆளும் கட்சியான அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்கேற்ப, கோவை மாநகர காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவியேற்றதும், கோவையில் மட்டுமல்லாமல், தமிழக அரசிலும், அதிமுக கட்சியிலும் ஆதிக்கம் செலுத்தி வந்த அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது குனியமுத்தூர் காவல் நிலையத்தில் தேர்தல் விதிமீறல் வழக்குப்பதிந்து அதிமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

பணவசூலில் ஈடுபட்டு வந்த 7 காவல் நிலைய உளவுக்காவலர்களை பணியிடம் மாற்றினார். தொடர் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மாநகர காவல்துறையில் இருந்த காவல் நிலைய உளவுக்காவலர் பிரிவையே கலைத்தார். ஒரு தலைபட்சமாக செயல்பட்ட காவல் ஆய்வாளரை பணியிடம் மாற்றினார். கடையை மூட வலியுறுத்தி, காந்திபுரம் உணவகத்தில் நுழைந்து வாடிக்கையாளர்கள், ஊழியர்களை தாக்கிய உதவி ஆய்வாளரை சஸ்பெண்ட் செய்ததோடு, அவர் மீது விசாரணைக் குழுவையும் அமைத்தார்.

உளவுத்துறை கூடுதல் டிஜிபி

ஒன்றரை மாதங்களே கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றினாலும், காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதத்தின் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றன. தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசில் முக்கியத்துவம் வாய்ந்த பதவி இவருக்கு ஒதுக்கப்படும் என பேச்சுகள் இருந்தன.

அதுபோலவே, தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, தமிழக காவல்துறையின் முக்கியத்துறையும், முதல்வரை தினமும் சந்தித்து தகவல்களை தெரிவிக்கும் அதிகாரம் படைத்த பதவியுமான, உளவுத்துறை (நுண்ணறிவுப் பிரிவு) கூடுதல் டிஜிபி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதம் நேற்று இரவு (மே 07) தமிழக அரசால் பணியிடம் மாற்றி நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோல், புதிய அதிகாரி இன்னும் நியமிக்கப்படாததால், மேற்கு மண்டல ஐஜி அமல்ராஜ், கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றத்தைத் தொடர்ந்தோ, கோவை மாநகர காவல்துறையினர் அதிகாரிகள், காவல்துறையினர் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x