கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்; 2 மாவட்டங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரும்; 2 மாவட்டங்களில் இடியுடன் கன மழைக்கு வாய்ப்பு
Updated on
1 min read

கடலோர மாவட்டங்களில் 5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் 2 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

''தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், கேரளப் பகுதிகளில் 1.5 கிலோ மீட்டர் வரை நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக இன்று மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், ஈரோடு, சேலம், திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

கடலோர மாவட்டங்களில் காற்றில் ஒப்பு ஈரப்பதம் 50 முதல் 90 விழுக்காடு வரை உள்ளதால் காற்றின் இயல்பு வெப்பநிலையானது 4 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக உணரப்படும். இதன் காரணமாக மாலை முதல் காலை வரை வெக்கையாகவும் இயல்புக்கு மாறாக அதிகமாகவும் வியர்க்கும்.

மே 11 முதல் 13 ஆம் தேதி வரை மேற்கு வடமேற்குத் திசையிலிருந்து காற்று வீச வாய்ப்பு உள்ளதால் தமிழகக் கடலோர மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் தற்போது நிலவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்''.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in