

தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை நேற்று (மே 07) பதவியேற்றுக்கொண்டது. இந்நிலையில், மே 11 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினர்கள் மே 11-ம் தேதி பதவியேற்கவுள்ளனர். மறுநாள் 12-ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
இது தொடர்பாக, தமிழ்நாடு சட்டப்பேரவை செயலாளர் கி.சீனிவாசன் இன்று (மே 08) வெளியிட்ட செய்திக்குறிப்பில், "பதினாறாவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் 2021-ம் அண்டு மே மாதம் 11-ம் தேதி, செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு, சென்னை - 2, வாலாஜா சாலை, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கலைவாணர் அரங்கம், மூன்றாவது தளத்தில் உள்ள பல்வகை கூட்டரங்கத்தில் தொடங்கவுள்ளது. அச்சமயம், இந்திய அரசியலமைப்பின்கீழ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும்.
சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான தேர்தல் சான்றிதழை உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர் மற்றும் பேரவை துணை சபாநாயகருக்கான தேர்தல்கள் 2021-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி, புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு நடைபெறும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.