

சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் கிணறுகள், கீழ்நிலை தொட்டி களில் குளோரின் திரவம் ஊற்றவும், பிளீச்சிங் பவுடர் தெளிக்க 115 சுகாதார குழுக்கள், பொது சுகாதார பணிகளை கவனிக்க 21 பறக்கும் படைகள் சுகாதாரத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, புறநகர் பகுதிகளில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப் புகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை, சிகிச்சை அளித்தல், வீடு வீடாக பிளீச்சிங் பவுடர், குளோரின் மாத்திரைகள் வழங்கு தல், குடிநீரில் குளோரின் அளவை பரிசோதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதைத் தொடர்ந்து, நேற்று முதல் சென்னை மற்றும் புற நகரில் வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் கிணறுகள், கீழ்நிலைத் தொட்டி களில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை உறுதி செய்யும் வகையில் 115 சுகாதார குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. இக்குழுக்களில் சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் பன்னோக்கு மருத்துவ பணியாளர்கள் இடம் பெறுவர்.
இக்குழுக்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் குறிப்பாக அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய், கூவம் ஆறு பகுதிகளில் உள்ள ஜாபர்கான்பேட்டை, சத்யா நகர், கோட்டூர்புரம், சைதாப்பேட்டை, சின்னமலை, மணப்பாக்கம், ஈக்காட்டுத் தாங்கல், எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று கிணறுகள், கீழ்நிலைத் தொட்டிகளில் குளோரின் திரவம் ஊற்றி, பிளீச்சிங் பவுடர் தூவி பாதுகாப்பான குடிநீரை உறுதி செய்வர். பொது சுகாதார பறக்கும் படையில் தலா ஒரு மருத்துவர், 2 உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இருப்பர். இவர்கள் சுகாதாரக் குழுக்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பர்.
அமைச்சர் ஆய்வு
நேற்று காலையில் சுகாதாரக் குழுக்கள் மற்றும் பறக்கும் படைகளின் பணிகளை தொடங்கி வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆலோசனை வழங்கியதுடன், புறநகர் பகுதிகளில் சுகாதாரத் துறையின் பணிகளை நேரடியாக ஆய்வு செய்தார். உடன் சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் இருந்தார்.