Published : 08 May 2021 01:19 PM
Last Updated : 08 May 2021 01:19 PM

2 வார ஊரடங்கு;  ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கு தொடர்ந்து ஊதியம் வழங்க வேண்டும்:கே.எஸ்.அழகிரி

சென்னை

ஊரடங்கு அமல்படுத்தப்படும் அதே நேரத்தில் கிராமபுற ஏழை எளிய மக்கள் பாதிக்கா வண்ணம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பொது ஊரடங்கு காரணமாகத் தொடங்க முடியாத நிலையில் அதில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஊதியத்தை வழங்க வேண்டும் என கே.எஸ்.அழகிரி கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று விடுத்துள்ள அறிக்கை:
“கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் காரணமாக கடந்த 10 நாட்களில் நாடு முழுவதும் 36,110 பேர் பலியாகியிருக்கிறார்கள். நேற்று ஒருநாள் மட்டும் 4.14 லட்சம் பேர் கரோனா தொற்றால் பாதிப்படைந்து, 3,927 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், தவறான அணுகுமுறை காரணமாகவும், தடுப்பூசி வழங்குவதில் தெளிவற்ற கொள்கையின் காரணமாகவும் மத்திய அரசு முழு தோல்வி அடைந்ததால் இன்னொரு ஊரடங்கு அவசியமாகிவிட்டதாகப் பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியிருக்கிறார்.

மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியைப் பெருக்காத நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மாநிலங்களுக்குத் தடுப்பூசி விநியோகிக்காமல் பாகுபாடு காட்டப்பட்டு வருவது கடும் விமர்சனத்தை எழுப்பியிருக்கிறது. இந்நிலையில் பொது ஊரடங்கு மட்டுமே இன்றைய கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில் தமிழகத்திலும் நேற்று ஒரே நாளில் 26,465 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி 197 பேர் பலியாகியிருக்கிறார்கள். நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் யதார்த்த கள நிலவரத்தை அறிந்து வருகிற 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை பொது ஊரடங்கை அறிவித்திருக்கிறார்.

சரியான நேரத்தில், சரியான முடிவை முதல்வர் எடுத்திருக்கிறார். கடுமையான பொது ஊரடங்கைக் கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்ற அடிப்படையில் முதல்வர் ஸ்டாலின் எடுத்த முடிவை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

கிராமப்புறத்தில் வாழ்கிற ஏழை, எளிய மக்களுக்கு வறுமையிலிருந்து விடுபடவும், வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும் செயல்பட்டு வருகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை பொது ஊரடங்கு காரணமாகத் தொடங்க முடியாத நிலையில் அதில் பணியாற்றுகிற தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து ஊதியத்தை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

சென்னை மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் நேற்று அறிவிக்கப்பட்டு, இன்றைக்கே நடைமுறைக்கு வந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. அதேநேரத்தில் மகளிருக்கு வழங்கப்படுகிற சலுகைகள், திருநங்கைகளுக்கும் அவசியம் வழங்கப்பட வேண்டும். எனவே, பொது ஊரடங்கினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம்.

ஆனால், கரோனா பாதிப்பிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட பொது ஊரடங்கு நடவடிக்கையைத் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வரவேற்கிறேன்”.

இவ்வாறு கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x