Published : 08 May 2021 12:32 PM
Last Updated : 08 May 2021 12:32 PM

திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணம் பரிசீலனை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை

மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என அறிவித்தது போல் திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயணம் குறித்தும் பரிசீலிக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றவுடன் கோட்டைக்குச் சென்று முதல் கையெழுத்தாக 5 அரசாணைகளை பிறப்பித்தார். கரோனா கால நிவாரண தொகையாக ரூ.4000 இந்தமாதம் ரூ.2000 அடுத்த மாதம் ரூ.2000 என அறிவிப்பு, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, மகளிருக்கு அரசு பேருந்தில் இலவச பயணம், முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கரோனா நோயாளிகளுக்கு தனியார் மருத்துவமனை செலவுகளை அரசே ஏற்பது, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் உள்ளிட்ட 5 அரசாணைகளில் கையெழுத்திட்டார்.

இதில் மகளிருக்கான அரசு பேருந்து சாதாரண பேருந்துகளில் இலவச பயணம் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போல் திருநங்கைகளுக்கும் இலவச பேருந்து பயணம் அனுமதி அளிக்க வேண்டும் என ட்விட்டரில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின் அதுகுறித்தும் பரிசீலிக்கப்படும் எனத்தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து கோரிக்கை வைத்த பெண்ணின் பதிவு:

“I request @mkstalin avargal to extend the free bus ride for women scheme to Trans-genders too as there are many who are finding it difficult to meet their ends Folded hands and this would be a saviour. பெண்களுடன், திருநங்கைகளுக்கும் இலவச பஸ் பயண திட்டத்தை அறிவித்தால் நன்றாக இருக்கும்”.

எனக்கோரிக்கை வைத்திருந்தார்.

இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு:

“மகளிர் நலன், உரிமை ஆகியவற்றுடன் திருநங்கையர் வாழ்வையும் இணைத்தே சிந்திப்பது தலைவர் காலந்தொட்டே திமுக அரசின் வழக்கம். தாங்கள் அதனை கவனப்படுத்தியமைக்கு நன்றி. பெண்களைப் போலவே திருநங்கையரும் கட்டணமின்றிப் பயணிப்பது குறித்து பரிசீலித்து, உரிய முடிவு விரைந்து எடுக்கப்படும்”.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x