

கரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தொடர்ந்து 5 நாட்களுக்கு மேலாகத் தாமதம் ஏற்படுவதால், திருப்பூர் மாவட்டத்தில் கரோனா பரிசோதனை மேற்கொண்டவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 450 முதல் 600 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்த நிலையில், பலரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டாலும், அவர்களுக்கான முடிவு தெரிவதில் 5 நாட்கள் வரை ஆவதால், தொற்றாளர்கள் மற்றும் குடும்பத்தினர் எனப் பலரும் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாவதுடன், நோய் குறித்த கடும் மன உளைச்சலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாகத் தொற்றாளர்கள் சிலர் கூறும்போது, ''உடலில் கரோனா அறிகுறி சந்தேகத்துடன் இருப்பவர்களுக்கு (ஸ்வாப்) பரிசோதனை மேற்கொண்டால், முடிவு தெரியக் கிட்டத்தட்ட 5 நாட்கள் ஆகின்றன. ஏற்கனவே அவர்கள் கரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவமனைக்குச் செல்ல மூன்று நாட்களாகும். இந்த நிலையில், பரிசோதனை முடிவு தெரிய மேலும் சுமார் 5 நாட்கள் ஆகும்போது, நோய் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் உடல்நிலை மேலும் பலவீனப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறது.
குறிப்பாக நுரையீரலில் சளியின் அளவு அதிகரிக்கும்போது, பலருக்கும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதேபோல் சிலர் பரிசோதனை செய்த பிறகு, வழக்கம்போல் வெளியே நடமாடுகின்றனர். இதில் தொற்று உறுதி செய்யப்படும்போதும், அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றுப் பரவ வாய்ப்புகள் எளிதாகிவிட்டன.
இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, பரிசோதனை முடிவுகள் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடியவரை, பரிசோதனை முடிவுகள் 24 மணி நேரத்துக்குள் தெரியவந்தால் மட்டுமே நோய்ப் பரவலை முழுமையாகத் தடுக்க முடியும். பெருந்துயரம் சூழ்ந்த நேரத்தில் மக்களைக் காப்பதுதான் அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். ஆகவே பரிசோதனை முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று தெரிவித்தனர்.
இதுகுறித்துத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, ''மருத்துவமனையில் ஸ்வாப் சோதனைதான் அதிகம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை (மே.7) 5,000 பரிசோதனைகள் முடிவுக்குக் காத்திருக்கின்றன. அதேபோல் ஆய்வகக் கூடத்தில், இரண்டு பரிசோதனை இயந்திரங்களுக்கு, இரண்டு டெக்னிஷியன்களே உள்ளனர். பரிசோதனைகள் நாளுக்கு நாள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், முடிவுகளும் தாமதமாகின்றன. இதனால்தான் தாமதம் ஆகிறது'' என்று தெரிவித்தனர்.