Published : 08 May 2021 10:41 AM
Last Updated : 08 May 2021 10:41 AM

மே 9 ஞாயிறு முழு ஊரடங்கு இல்லை: மே.8, மே.9-ம் தேதி அனைத்து கடைகளும் திறந்திருக்கும்

மே 10 திங்கட்கிழமை முதல் 2 வாரம் முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு இருக்கும், இதனால் நாளை என்ன நிலை என பொதுமக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இதையொட்டி இன்றும், நாளையும் கடைகள் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மே.6 முதல் 20 வரை பகல் 12 மணி வரை கடைகள் திறந்திருக்கும் என பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று பதவி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் இன்று காலை ஊரடங்கு குறித்து அறிவித்தார். அவரது அறிவிப்பில், “நோய்த்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1.35 லட்சமாக உள்ளது. தற்போதுள்ள நோய் பரவல் நிலை, வெளிநாடுகளில் உருமாறிய கரோனா வைரஸின் தாக்கம், அண்டை மற்றும் இதர வெளிமாநிலங்களில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளானவர்களின் எண்ணிக்கை, மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களது பரிந்துரையின் அடிப்படையிலும், நான் நேற்று (மே 07) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நடத்திய ஆய்வுக் கூட்டத்தின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ வல்லுநர்களுடன் கலந்தாலோசித்தும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள் துறை அமைச்சகம், மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் ஆகியவை பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், மே 10 ஆம் தேதி காலை 4.00 மணி முதல் மே.24 ஆம் தேதி காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக மே.08 இன்று (சனிக்கிழமை) மற்றும் மே.09 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

ஆகவே இன்றும், நாளையும் கடைகள் திறக்கப்பட்டிருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x