Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM

முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள்: அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு

சென்னை

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகளை அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

இதுதொடர்பாக நேற்று அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள் மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்படி கரோனா சிகிச்சை பெறலாம்என்ற அறிவிப்பு பாராட்டுக்குரியது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாககரோனா அச்சுறுத்தல் தொடர்வதால் மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணம், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை உள்ளிட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார். போர்க்கால அடிப்படையில் கரோனாவுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக நடத்தி முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: ரேஷன்அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கமாகும். கரோனா பரவலால் பரிதவித்து நிற்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.

சமக தலைவர் சரத்குமார்: கரோனா பேரிடர் காலத்தில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஸ்டாலின்,முதல்நாள், முதல் கையெழுத்திலேயே ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், உள்ளூர் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5 அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேசமயம், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இனி ஒரு உயிர்கூட தமிழகம்இழக்காத அளவுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா: ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என்று முதல்வர் மு.க.ஸ்டாலினின் முதல் 5 அறிவிப்புகள் பாராட்டுக்குரியது. தேர்தல் வாக்குறுதிகளில் நான்கை உடனடியாக நிறைவேற்றியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்: முதல்வராகப் பதவியேற்ற முதல்நாளிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற கோப்புகளில் கையெழுத்திட்டிருப்பது வரவேற்புக்குரியது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் பணி சிறக்க வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x