

செங்கல்பட்டு அடுத்த நத்தம் பகுதியில் மேட்டுத்தெருவைச் சேர்ந்த முருகன் மகன் தீபக்(13). வீட்டின் அருகில் உள்ள தட்டான்மலை தெருவில் உள்ள நண்பர் வீட்டுக்குச் சென்றபோது சுற்று சுவரில் பொருத்தப்பட்டிருந்த இரும்புக் கதவை திறந்தார்.
அப்போது, சுமார் நான்கு அடி உயரம் கொண்ட சுற்று சுவர் திடீரென சரிந்து சிறுவன் மீது இடிந்து விழுந்தது. படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு, சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.