சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்: புறநகர் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு

சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதம்: புறநகர் மின்சார ரயில் சேவை கடும் பாதிப்பு
Updated on
1 min read

சென்னையில் மீண்டும் பெய்து வரும் கனமழையால் நகரில் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் நிற்பதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்சார ரயில்கள் வந்து செல்லும் 1,2,3 மற்றும் 4-வது நடைமேடைகளில் உள்ள தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கியதால் அந்த நடைமேடைகளிலிருந்து மின்சார ரயில் இயக்கப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

5-வது நடைமேடையிலிருந்து சொற்ப மின்சார ரயில்கள் மிகக் குறைந்த வேகத்தில் தாம்பரம்-கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை வரை மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தன. இதனால் சில மின்சார ரயில்கள் பல்லாவரத்திலிருந்து கடற்கரை வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

தண்டவாளங்கள் தண்ணீரில் மூழ்கியதால் சில மின்சார ரயில்கள் குரோம்பேட்டை ரயில் நிலைய நடைமேடைகளில் நிறுத்தப்படாமல் முன்னாலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

செங்கல்பட்டு ரயில் நிலையத்திலும் தண்டவாளங்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் அந்த வழியே வந்து செல்லும் அனைத்து ரயில்களும் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன.

செங்கல்பட்டிலிருந்து சென்னை எழும்பூர் வர சுமார் 3 மணி நேரம் ஆனதாக பயணிகள் தெரிவித்தனர். தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த ரயில்கள் 30 நிமிடங்களிலிருந்து இரண்டரை மணி நேரம் வரை தாமதமாக எழும்பூர் ரயில் நிலையம் வந்து சேர்ந்தன. ரயில்கள் தாமதம் காரணமாக பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.

மழை காரணமாக சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் சிங்கப்பெருமாள்கோயிலில் இருந்து தாம்பரம் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் இந்த தூரத்தைக் கடக்க பல மணி நேரம் ஆனது.

இதேபோல, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம் வழியாக செல்லும் மின்சார ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த வழியே வந்து செல்லும் அனைத்து ரயில்களும் மிகவும் மெதுவாக இயக்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in