

கோவையில் 10 ஹோட்டல்கள் கரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு, அறிகுறிகளற்ற தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கோவையில் கரோனா தொற்று ஏற்பட்டு அறிகுறிகள் இல்லாமல் உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பாரதியார் பல்கலைக் கழகம், கொடிசியா வளாகம், மத்தம்பாளையம் காருண்யா மையம், அண்ணா பல்கலைக்கழக வளாகம்,தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகம் உள்ளிட்ட இடங்களில் அரசு சார்பில் தற்காலிக சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு சிகிச்சை பெற விருப்பம் இல்லாமல் தனியாக தங்க விரும்புபவர்களுக்கு வசதியாக ஹோட்டல்களில் சிகிச்சை மையம் அமைக்க சுகாதாரத் துறை அனுமதி அளித்தது. அதன்படி, இதுவரை10 ஹோட்டல்களுக்கு கோவையில் அனுமதி அளிக்கப் பட்டுள்ளது.499 படுக்கை வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து கரோனா சிகிச்சை மையம் அமைக்கஇன்னும் சில ஹோட்டல்கள் சுகாதாரத் துறையிடம் விருப்பம் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறும்போது, “அறிகுறி அற்றவர்கள், மிதமான பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும், குணமாகும் வரை தங்களை அவர்கள் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டும். எனவே, தொற்று உறுதியானவர்கள் முதலில் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் உள்ள ‘டிரையேஜ்’ மையத்துக்கு அனுப்பிவைக்கப்படுகின்ற னர். அங்கு நோயாளியின் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவைகணக்கிட்டு அறிகுறிகள் அற்றவர்கள், மிதமான பாதிப்பு உள்ளவர்களை மட்டும் கரோனா சிகிச்சைமையங்களுக்கு செல்லவும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள வும் பரிந்துரைக்கின்றனர்.
தனியே ஹோட்டல்களில் அமைக்கப்பட்டுள்ள சிகிச்சை மையங்களில் தங்க விரும்புவோர் அதற்குரிய கட்டணத்தை செலுத்தி தங்கிக்கொள்ளலாம்.
வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று நினைப் பவர்களும் இதுபோன்ற ஹோட்டல் களில் தங்கிக்கொள்ளலாம். ஹோட்டல்களில் உள்ள வசதிக்கேற்ப கட்டணத்தை நிர்ணயிக்கின்றனர். ஒவ்வொரு ஹோட்டலிலும், அதனுடன் இணைந்து செயல்படும் தனியார் மருத்துவமனையின் மருத்துவர், செவிலியர் உள்ளிட்டோர் பணியில் இருப்பார்கள். அவர்கள் நோயாளிகளை கவனித்துக் கொள்வார்கள்” என்றனர்.