

சமூக இடைவெளியை கடைபிடிக் காமல் பயணிகள் நெருக்கமாக அமர்வதை தடுக்க சிமென்ட் இருக் கைகளை தலைகீழாக கவிழ்த்து வைத்து ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நெகமம் அருகே தேவனாம் பாளையம் ஊராட்சியில் கரோனா தொற்றால் நான்கு பேர் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊராட்சி நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவில்பாளையத்தில் இருந்து தேவனாம்பாளையம் வழியாக நெகமத்துக்கும், பொள்ளாச்சியிலிருந்து தேவனாம்பாளையம் வழியாக செட்டிக்காபாளையத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிராமத்தில் மூன்று இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன. பயணிகள் மட்டுமின்றி, தானியப் பயிர்கள், காய்கறிகள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டுசெல்ல விவசாயிகள் இந்தப் பேருந்து நிறுத்தங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். பேருந்து நிறுத்தங்களில் 6 சிமென்ட் இருக்கைகளை ஊராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.
2 பேர் அமரக்கூடிய இந்த இருக்கைகளில் சமூக இடைவெளியின்றி, 4 பேர் வரை நெருக்கமாக அமர்வதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக கருதிய ஊராட்சி நிர்வாகம், சிமென்ட் இருக்கைகளை தலைகீழாக கவிழ்த்து வைத்துள்ளது. மேலும் தினந்தோறும் பேருந்து நிறுத்தங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் சமூக இடைவெளியை கடைபிடிக்க ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.