கரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் காலதாமதம்: கடும் மன உளைச்சலுக்கு ஆளாகும் தொற்றாளர்கள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் 5 நாட்களுக்கு மேலாக தாமதம் ஏற்படுவதால், திருப்பூர் மாவட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து, நாளொன்றுக்கு 450 முதல் 600 பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், பலரும் கரோனா பரிசோதனை மேற்கொண்டாலும், அவர்களுக்கான முடிவு தெரிவதில் 5 நாட்கள் வரை ஆவதால், தொற்றாளர்கள் மற்றும் குடும்பத்தினர் என பலரும் பல்வேறு சிரமங்களுக்கும், நோய் குறித்த கடும் மனஉளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக தொற்றாளர்கள் சிலர் கூறும்போது, "உடலில் கரோனா அறிகுறி சந்தேகத்துடன் இருப்பவர்கள் (ஸ்வாப்) பரிசோதனை மேற்கொண்டால், முடிவு தெரிய கிட்டத்தட்ட 5 நாட்களாகிறது. ஏற்கெனவே அவர்கள் கரோனாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் மருத்துவமனை செல்ல மூன்று நாட்களாகும். இந்நிலையில், பரிசோதனை முடிவு தெரிய கிட்டத்தட்ட 5 நாட்களானால், நோய் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் உடல்நிலை மேலும் பலவீனப்படும் சூழலுக்கு தள்ளப்படுகிறது. குறிப்பாக, நுரையீரலில் சளியின் அளவு அதிகரிக்கும்போது, பலருக்கும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.

அதேபோல, சிலர் பரிசோதனை எடுத்துக்கொண்ட பிறகு வழக்கம்போல வெளியே நடமாடுகின்றனர். இதில் தொற்று உறுதி செய்யப்படும்போதும், அவர்கள் மூலமாக பலருக்கு தொற்று பரவ வாய்ப்புகள் எளிதாகிறது. இதையெல்லாம் கருத்தில்கொண்டு, பரிசோதனை முடிவுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணி நேரத்துக்குள் தெரியவந்தால் மட்டுமே நோய் பரவலை முழுமையாக தடுக்க முடியும்" என்றனர்.

உயிரிழப்பால் அச்சம்

மற்றொரு தரப்பினர் கூறும்போது, "உடலில் பல்வேறு நோய் தொற்று உள்ளவர்கள் பரிசோதனை செய்தால், அவர்களது முடிவு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். திருப்பூர் மாநகர் பகுதியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு 40 வயதுதான். அவர் கரோனாவாக இருக்காது என அலட்சியமாக இருந்துவிட்டு, அதன்பின்னர் மருத்துவமனைக்கு சென்றார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது தாயும், தந்தையும் கரோனா சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்று பாதித்த 5 நாட்களுக்குள், ஒரு குடும்பத்தின் நிலை தலைகீழாக மாறிவிடுகிறது. பெருந்துயரம் சூழ்ந்த நேரத்தில், மக்களை காப்பதுதான் அரசின் கடமையும், பொறுப்பும் ஆகும். எனவே, பரிசோதனை முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்" என்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் கூறும்போது, "மருத்துவமனையில் ஸ்வாப் அதிகம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

தற்போது வரை (மே 7) 5000 பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கின்றன. அதேபோல, ஆய்வகக் கூடத்தில் இரண்டு பரிசோதனை இயந்திரங்களுக்கு இரண்டு டெக்னிஷியன் உள்ளனர். நாளுக்கு நாள் பரிசோதனை அதிகரித்திருப்பதால் முடிவுகளும் தாமதமாகின்றன" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in