

மஸ்தானுக்கு அரசியலில் குருவானசெஞ்சி ராமசந்திரனுக்கு வழங்காத அமைச்சர் பதவியை அவரின்சிஷ்யருக்கு திமுக தலைமை வழங்கியுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக திமுகவினர் தெரிவித்தனர்.
தமிழக அரசின் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மஸ்தான் நேற்று பொறுப்பேற்றார். இவர் 31.5.1955-ல் பிறந்தார். செஞ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1972-ம் ஆண்டு 8-ம் வகுப்பு படித்துள்ளார்.
ஆரம்பத்தில் டீக்கடையில் டீ மாஸ்டராக பணியாற்றிய மஸ்தான் 1976-ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்ட திமுக செயலாளராக இருந்த செஞ்சி ராமசந்திரன் அவருக்கு பக்க பலமாக நின்றார்.
1978-ம் ஆண்டு செஞ்சி பேரூராட்சி செயலாளராகவும், 1980-ம்ஆண்டு திமுக பொதுக்குழு உறுப்பினராகவும், 1992-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினராகவும், 1996-ம் ஆண்டு மாநில செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்.
1999-ம் ஆண்டு ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்ட அவைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார். 2014-ம் ஆண்டு முதல் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்து வருகிறார்.
மேலும் 1986-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 5 முறை செஞ்சி பேரூராட்சி தலைவராக இருந்தார். 1989-ம் ஆண்டு செஞ்சி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், 1996-ம் ஆண்டு கடலூர் - விழுப்புரம் மாவட்ட பால்வள பெருந்தலைவர்,1996-ம் ஆண்டு செஞ்சி விவசாய கூட்டுறவு வங்கி தலைவர் என பதவி வகித்துள்ளார்.
2016-ம் ஆண்டு முதல் முறையாக செஞ்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 35,803 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தேநீர் கடையை மறக்கவில்லை
இவருக்கு சைத்தானி பீ என்ற மனைவியும், மொக்தியார் என்ற மகனும், மைமுன்னிசா, ஜெய் முன்னிசா, தை முன்னிசா என்கிற மகள்களும் உள்ளனர்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் நம்மிடம் கூறும்போது, “நான் என்றைக்கும் என் ஆரம்ப தொழிலான தேநீர் விடுதி, உணவு விடுதியை மறப்பதில்லை. நேரம் கிடைத்தாலும் வாடிக்கையாளர்களுக்கு நானே டீ போட்டு கொடுத்து வருகிறேன். என் ஆரம்ப தொழிலை மறக்கவில்லை. மறக்கவும் மாட்டேன்” என்றார். அவர் தொடங்கிய தேநீர்கடை இன்றும் செஞ்சி பேருந்து நிலையம் எதிரில் கேஎஸ்எம் டீ ஸ்டால் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
செஞ்சி திமுகவினர் கூறுகையில், “மஸ்தானுக்கு அரசியலில் குருவான செஞ்சி ராமசந்திரனுக்கு வழங்காத அமைச்சர் பதவியை அவரின் சிஷ்யருக்கு திமுக தலைமை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது” என தெரிவித்தனர்.