ஒரே நாளில் 290 பேருக்கு கரோனா பாதிப்புவிருதுநகரில் ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க நடவடிக்கை

அரசு மருத்துவமனைகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்புவதற்காக விருதுநகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்குக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படும் சிலிண்டர்கள்.
அரசு மருத்துவமனைகளிலிருந்து ஆக்சிஜன் நிரப்புவதற்காக விருதுநகரில் உள்ள மாவட்ட மருந்து கிடங்குக்கு லாரிகளில் கொண்டு வரப்பட்டு இறக்கி வைக்கப்படும் சிலிண்டர்கள்.
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறையை சமாளிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஊழியர் உட்பட 290 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 5 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தனர்.

மாவட்டத்தில் இதுவரை 21,519 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,585 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,686 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் போதிய அளவு சிகிச்சைக்குத் தேவையான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் மற்றும் மாவட்ட மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் ஆகியோர் கூறியதாவது: தற்போது சிவகாசி மெப்கோ கல்லூரியில் 300 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அதில், தற்போது 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 200 படுக்கை வசதிகளுடன் கரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜபாளையத்தில் ராம்கோ கல்லூரியிலும் கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட உள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் 800 படுக்கை வசதிகள் உள்ளன.

விருதுநகர் மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மதுரையிலிருந்துதான் தேவையான அளவு ஆக்சிஜனை பெற்று வருகிறோம். மதுரை மற்றும் தூத்துக்குடியில் உள்ள தனியார் உற்பத்தி நிலையங்களிலிருந்து ஆக்சிஜன் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்குத் தேவையான அளவு ஆக்சிஜன் வழங்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு காலியான சிலிண்டர்கள் விருதுநகரில் உள்ள அரசு மருந்து கிடங்குக்குக் கொண்டு வரப்பட்டு பின்னர் அவை ஆக்சிஜன் நிரப்புவதற்காக மதுரை மற்றும் தூத்துக்குடிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. அதேபோன்று, ஆக்சிஜன் நிரப்பப்பட்ட சிலிண்டர்கள் மாவட்ட மருந்துக் கிடங்கிலிருந்து தேவையான எண்ணிக்கையில் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன என்று தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in