

தென் மாவட்டத்துக்கு முதன் முறையாக போக்குவரத்து அமைச்சர் பதவி கிடைத்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் வெற்றிபெற்ற ராஜ கண்ணப்பன் 25 ஆண்டுகளுக்குப் பின் அமைச்சர் ஆனார். அவருக்கு முக்கியத் துறையான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளதால் ராமநாதபுரம் மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கியபோதே மாணவர் அமைப்பில் இருந்தவர் ராஜ கண்ணப்பன். அதன்பின், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 1991-96 அமைச்சரவையில் பொதுப் பணித் துறை, மின்சாரம், நெடுஞ்சாலைத்துறை என 3 முக்கியத் துறைகளின் அமைச்சராக இருந்தார். அதிமுகவில் முக்கிய நிர்வாகியாகவும் வலம் வந்தார். பின்னர் கட்சியில் ஜெயலலிதா முக்கியத்துவம் அளிக்காததால், 2000-ம் ஆண்டில் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டும், அதன்பின் திமுகவுடன் கூட்டணி அமைத்து 2001 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டும் தோல்வியடைந்தார்.
பின்னர் கட்சியை கலைத்துவிட்டு 2006-ல் திமுகவில் இணைந்தபின், அந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இளையான்குடி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்த நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
அதனால் மீண்டும் அதிமுகவில் இணைந்த அவர், 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருந்தபோதும் 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா வாய்ப்பளித்தார். ஆனால், அந்த தேர்தலிலும் ராஜ கண்ணப்பன் தோல்வியடைந்தார். அதிமுகவில் தலைவராக வலம் வந்த ராஜ கண்ணப்பனுக்கு ஜெயலலிதா மறைவுக்குப்பின் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்பட வில்லை. அதனால் மீண்டும் கடந்த 2020-ல் திமுகவில் இணைந்தார்.
இந்நிலையில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றிபெற்றார். தென்மாவட்ட அளவில் இதுவரை யாரும் போக்குவரத்து துறை அமைச்சர் ஆனதில்லை. முதன்முறையாக ஒருவருக்கு போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதுவும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெற்றிபெற்ற ராஜ கண்ணப்பனுக்கு முக்கியத் துறையான போக்குவரத்து துறை ஒதுக்கப்பட்டுள்ளதால், அம்மாவட்ட திமுகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.