சென்னை ராமாபுரம் நிலவரம்: காசிமேடு மீனவர் குழுவால் நூற்றுக்கணக்கானோர் மீட்பு
சென்னை - ராமாபுரம் வெள்ளம் சூழந்த பகுதிகளில் கடந்த இரு நாட்களாக காசிமேடு மீனவர் குழுவால் ஏறத்தாழ 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ராமாபுரத்தின் சத்யா நகர், ராயலா நகர் பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தன. அந்தப் பகுதிகளில் நேற்று (புதன்கிழமை) நள்ளிரவு வரை முதல் மாடி அளவில் வெள்ளம் சூழ்ந்தன. தரைதளத்தில் உள்ளவர்கள் முதல் மாடி, இரண்டாவது மாடிகளில் தஞ்சம் புகுந்தனர்.
அதேநேரத்தில், நேற்று மாலை முதலே சென்னை காசிமேடு அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் கொண்ட குழு 6 படகுகள் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அவர்கள் 500-க்கும் மேற்பட்டோரை பத்திரமாக மீட்டுள்ளனர்.
இன்று மாலை 5 மணி நிலவரப்படி, சத்யா நகரின் பெரும்பாலான இடங்களில் இடுப்பளவு தண்ணீரும், உள் பகுதியில் மார்பளவு தண்ணீரும் தேங்கியிருந்தன. ராயலா நகரின் உட்பகுதிகளில் நடந்து செல்லக்கூடிய அளவில் மட்டும் தண்ணீர் தேங்கியிருந்தது. மைக்கேல் கார்டன், அரச மரம், எஸ்.ஆர்.எம். / ஈஸ்வரி கல்லூரிப் பகுதிகளில் எந்த பாதிப்பும் இல்லை. மின்சாரம், செல்போன் நெட்வோர்க் மட்டுமே ராமாபுரம் பகுதி முழுவதும் தொடர்ந்து முடங்கியுள்ளன.
"மிகுந்த சிரமத்துக்கிடையே மீட்டோம்"
மீட்பு நடவடிக்கை குறித்து குழுவை வழிநடத்திய மீனவர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.மகேஷ் 'தி இந்து'விடம் கூறும்போது, "சத்யா நகர், ராயலா நகர் மற்றும் மைக்கேல் கார்டன் பகுதிகளில் முதல் மாடி அளவில் நேற்றைய தினம் தண்ணீர் சூழ்ந்திருந்தது. 6 படகுகள் மூலம் நூற்றுக்கணக்கானோரை மீட்டோம். மிகுந்த சிரமத்துக்கிடையே மீட்புப் பணிகளை மேற்கொண்டோம். சில இடங்களில் மின் கம்பங்களின் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு படகை ஓட்டினோம். இதுவரை சுமார் 500 பேரை மீட்டுள்ளோம்.
நேற்றைய தினம் மீட்கப்பட்டோரை மைக்கேல் கார்டனைத் தாண்டி அரசமரம் பகுதிகளில் கொண்டு சேர்த்தோம். இன்று, ராமாபுரம் - போரூர் சாலை ஓரளவு சீரடைந்ததால் அங்கு மக்களைக் கொண்டு சேர்த்து வருகிறோம்.
படம்: காசிமேடு மீனவர்கள் குழுவால் ராமாபுரம் மீட்புப் பணிகளை வழிநடத்தும் மகேஷ், முருகன் உள்ளிட்டோர்.
இன்றைய தினம் காலையில் இருந்தே தண்ணீர் வடியத் தொடங்கியது. இதனால், சத்யா நகருக்குள் சென்று பலரையும் மீட்டுவர முடிந்தது. ராயலா நகரிலும் பெரிய பாதிப்பு இல்லை. இப்போது எங்களுடன் மீட்புப் படையினரும் இணைந்துள்ளனர். 10-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் மீட்புப் பணிகள் தொடர்கின்றன" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "எங்களைப் போன்ற மீனவர்கள் பலரும் தாங்களாக முன்வந்து எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், ஊடகங்களில் அரசு சார்ந்த மீட்புப் படையினர் மட்டுமே கவனத்தில்கொள்ளப்படுவது மட்டும்தான் எங்களுக்கு சற்றே வருத்தம் அளிக்கிறது" என்றார் மகேஷ்.
"மாணவிகளை மீட்டது நெகிழ்ச்சி"
"விடுதி ஒன்றில் சுமார் 20 மாணவிகள் சிக்கியிருந்தனர். நள்ளிரவில் அவர்களை பத்திரமாக மீட்டு பிரதான சாலைக்குக் கொண்டு சேர்த்தோம். பிறகு, அவர்கள் எங்கு செல்வது என்று செய்வதறியாது தவிப்பதைக் கண்டோம். உடனே, அந்தப் பகுதியில் உள்ள மூன்றாவது மாடி வீட்டில் நாங்களே பேசி, அவர்களை அங்கு தங்கவைக்க ஏற்பாடு செய்தோம். தற்போது ஒவ்வொரு முறையும் படகில் மக்களை மீட்டுச் செல்லும்போதும் அவர்கள் மொட்டைமாடியில் இருந்து உற்சாகப்படுத்துவது எங்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது" என்றார் மீனவர் மீட்புக் குழுவைச் சேர்ந்த முருகன்.
பெண் அதிகாரியுடன் வாக்குவாதம்
இதனிடையே, ராமாபுரம் - போரூர் பிராதான சாலையில் மக்களை பத்திரமாக சேர்த்துவிட்டு, அடுத்த சுற்றுக்குத் திரும்பியபோது, ஒரு நபரைக் குறிப்பிட்ட இடத்தில் சேர்க்குமாறு பெண் அதிகாரி ஒருவர் உத்தரவிட்டார். அதற்கு, மீனவர் குழுத் தலைவர் மகேஷ் மறுத்துவிட்டு, "ஒரு சுற்றில் 10 பேரை மீட்கும் நேரம் வீணாகிவிடும்" என்று கூறினார். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடைசியில், "பிரச்சினை வேண்டாம். நமக்கு மீட்புப் பணிதான் முக்கியம்" என்று கூறி அந்தப் பெண் அதிகாரி ஒதுங்கிக்கொண்டார்.
செம்பரம்பாக்கம் ஏரியில் தற்போது திறந்துவிடப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டிருப்பதால், ராமாபுரம் பகுதியில் வெள்ளம் வெகுவாக வடிந்துள்ளது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேர கனமழை விவரத்தைக் கூறி, அப்பகுதி மக்களை பாதுகாப்பான இடத்துக்கு படகுகள் மூலம் செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
