

குமரி மாவட்டத்தில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்ப முடியாமல் வர்த்தகம் முடங்கியதால் முந்திரி கொள்முதல் விலை கிலோ ரூ.75 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்னை, ரப்பர், வாழை உள்ளிட்ட பணப்பயிர்களை போன்றே முந்திரி விவசாயமும் பரவலாக உள்ளது. சர்வதேச சந்தையில் முந்திரிக்கு தேவை அதிகம் இருப்பதால் விவசாயிகள் நல்ல வருவாய் அடைந்து வந்தனர். வழக்கமாக மரத்தில் இருந்து பறிக்கப்பட்ட முழுமையான முந்திரி காய்கள் கிலோ ரூ.150-க்கு மேல் விற்பனை ஆகும்.
இவை உள்ளூரில் உள்ள முந்திரி தொழிற்சாலைகள் மற்றும் குடிசைத் தொழிலாக முந்திரியை வறுத்து வியாபாரம் செய்வோருக்கு விற்பனை செய்யப்படும். இது தவிர அதிகமாக தேங்கும் முந்திரிக் காய்கள் வெளியூர்களுக்கு வர்த்தகத்துக்காக அனுப்பப்படும். இதனால் 5 ஆண்டுகளாக முந்திரி கிலோ ரூ.150-க்கு குறையாமல் விற்பனையாகி வந்தது.
ஆனால், கரோனா பாதிப்பால் கடந்த ஆண்டு முதல் குமரி மாவட்டத்தில் இருந்து முந்திரி வெளியூர்களுக்கு வர்த்தகம் நடைபெறவில்லை. இதனால் முந்திரி தேக்கம் அடைந்து வருகிறது. இதன் விளைவாக ஒரு கிலோ முந்திரி ரூ.75-க்குவிவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து முந்திரி விவசாயிகள் கூறும்போது, ‘‘கன்னியாகுமரி மாவட்டத்தில் விளையும் முந்திரிக்கு வெளியூர்களில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் தரிசு நிலத்தில் நட்ட முந்திரி மரங்களில் இருந்து ஓரளவு வருவாய் பெற்று வந்தோம். ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே மாதம் முந்திரி அறுவடை காலமாகும். கடந்த ஆண்டும் இதே பருவத்தில் விலையின்றி நஷ்டம் அடைந்தோம். தற்போதும் அந்த நிலை நீடிக்கிறது. கரோனா காலத்தில் வருவாய் இல்லாதபோது முந்திரி விவசாயம் கைகொடுக்கும் என நம்பியிருந்த நிலையில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது’’ என்றனர்.