Last Updated : 08 May, 2021 03:15 AM

 

Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

திருச்சி மாநகரில் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள வளர்ச்சித் திட்டங்கள் நிறைவேற்றப்படுமா? - அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி மீது மக்கள் எதிர்பார்ப்பு

திருச்சி

திருச்சி மாநகரில் நீண்ட கால மாக கிடப்பில் உள்ள ஒருங்கி ணைந்த பேருந்து நிலையம் உள் ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை நிறைவேற்ற புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழகத்தின் மையப்பகுதியாக உள்ள திருச்சி மாநகரில் மக்களுக் கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை. மாந கரின் வளர்ச்சிக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நீண்ட காலமாகவே கிடப்பில் போடப் பட்டுள்ளன.

ஒருங்கிணைந்த பேருந்து நிலையம்

மாநகரில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் வகை யில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என 25 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகி றது. கடந்த திமுக ஆட்சியில் இதற்காக பஞ்சப்பூரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அப்போது துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் பார்வையிட்டுச் சென்ற நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்தத் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பிலேயே உள்ளது.

பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் சாலை

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அரியமங்கலம் பால்பண்ணை ரவுண்டானாவிலிருந்து துவாக்குடி வரை சர்வீஸ் சாலை இல்லாததால் அடிக்கடி விபத்துகளில் உயிரிழப்பு கள் ஏற்படுகின்றன. எனவே, இங்கு சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தியும், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்ட பிறகும்கூட இதுவரை அதற்கான பணிகள் தொடங்கப்படவில்லை.

மன்னார்புரம் ரயில்வே மேம்பாலம்

திருச்சி ரயில்வே ஜங்ஷன் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக அரிஸ்டோ ரவுண்டானாவை மைய மாகக் கொண்டு மத்திய பேருந்து நிலையம், திண்டுக்கல் சாலை, ஜங்ஷன் சாலை, கிராப்பட்டி சாலை, மன்னார்புரம் வழியாக சென்னை சாலை ஆகியவற்றை இணைக்கும் வகையில் ரூ.81 கோடி செலவில் பிரம்மாண்ட பாலம் கட்டும் பணிகள் கடந்த 2014-ல் தொடங்கின. மன்னார்புரம் செல்லும் வழித்தடத்தில் இதற்கு தேவையான 0.268 ஹெக்டேர் ராணுவ நிலத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக இத்திட்டம் முடிக்கப்படாமல் கிடப்பிலேயே உள்ளது.

காந்தி மார்க்கெட் இடமாற்றம்

காந்தி மார்க்கெட் பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடியில் ரூ.77.6 கோடி செலவில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர் களுக்கான மத்திய வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால் மாநகரிலிருந்து வெகுதொலைவில் இருப்பதாகக் கூறி வியாபாரிகள் அங்குசெல்ல மறுத்து வருகின்றனர். இதனால் காந்தி மார்க்கெட் இடமாற்றத் திட்டமும் செயல்படுத் தப்படாமல் உள்ளது.

கடும் போக்குவரத்து நெரிசல்

மக்கள் தொகை பெருக்கம், வாகனங்களின் எண்ணிக்கை அதி கரிப்புக்கு ஏற்ப சாலை வசதிகளை விரிவாக்கம் செய்யாததால் திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசல் பரவலாக காணப்படுகிறது. குறிப் பாக வயலூர் சாலை, பாலக்கரை சாலை, பழைய மதுரை சாலை, காந்தி மார்க்கெட்டிலிருந்து செல்லும் தஞ்சை சாலை போன்ற வற்றில் எந்நேரமும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது. பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இச்சாலைகளை விரிவுபடுத்தவோ அல்லது இவற்றுக்கு மாற்றாக புதிய சாலைகளை உருவாக்கவோ எந்த முயற்சியும் எடுக்கப்படாததால் மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

பொது போக்குவரத்து வசதி

இதுதவிர சர்வதேச விமான நிலைய ஓடுதள விரிவாக்கம், சர்வதேச தரத்திலான விளையாட் டரங்கம், புதிய மேம்பாலங்கள், மாநகருக்குள் சாலைகளை விரிவாக்கம் செய்து பேருந்து உள் ளிட்ட பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் இம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கைகளாக உள்ளன.

மாற்றம் தருவார்களா அமைச்சர்கள்?

கடந்த அதிமுக ஆட்சியில் திருச்சியைச் சேர்ந்த வெல்லமண்டி என்.நடராஜன், எஸ்.வளர்மதி ஆகியோர் அமைச்சர்களாக இருந்தபோதிலும், இத்திட்டங்கள் நிறை வேற்றப்படவில்லை. தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான திமுக அரசில் திருச்சி மேற்குத் தொகுதி எம்எல்ஏவான கே.என்.நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராகவும், திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏ வான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை அமைச்சராகவும் பொறுப்பேற் றுள்ளனர். இவர்கள் கிடப்பில் போடப்பட்டுள்ள நீண்டகாலத் திட்டங்களை நிறைவேற்றுவதுடன், புதிய வளர்ச்சித் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்பதே திருச்சி மாவட்ட மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது. vc

இதுகுறித்து திருச்சி மாநகர வளர்ச்சி குழும (டைட்ஸ்) நிர்வாக உறுப்பினர் ஷ்யாம் சுந்தர் கூறும்போது, ‘‘கடந்த திமுக ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட திட்டங்கள் மட்டுமின்றி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ரங்கம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தபோது அறிவிக்கப்பட்ட பல திட்டங்கள்கூட இதுவரை நிறைவேற்றப் படாமல் உள்ளன. கடந்த அதிமுக ஆட்சியில் இம்மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதிலும் அவர்கள் அரசிடம் போதிய அழுத்தம் கொடுத்தும், போராடியும் பெற்று கொடுக்காததால் எந்தவித வளர்ச்சி திட்டமும் திருச்சிக்கு கிடைக்கவில்லை.

இப்போது அமைச்சர்களாக அறிவிக்கப்பட்டுள்ள 2 பேருமே கட்சியிலும், ஆட்சியிலும் செல் வாக்கு படைத்தவர்கள் என்பதால் நிச்சயமாக கிடப்பிலுள்ள திட்டங் களை எல்லாம் நிறைவேற்றி திருச்சியின் வளர்ச்சிக்கு புத்துயிர் அளிப்பார்கள் என நம்புகிறோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x