

கோவை மாநகராட்சியில் கோப்பு மாயமான விவகாரம் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கோப்பு ஒன்று மாயமானதாக தகவல் வெளியானதையடுத்து கோவை மாநகராட்சி அலுவலர்களுக்கு மாநில தகவல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவை மாநகராட்சியில் உள்ள வார்டுகளில் சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, நகர ஊரமைப்பு, குடிநீர் விநியோகம், கல்வி உள்ளிட்ட பொதுமக்கள் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நகர ஊரமைப்புத் துறை மூலம் கட்டிட அனுமதி, அங்கீகரிக்கப்பட்ட மனைப் பிரிவுகள் உள்ளிட்டவை நிர்வகிக்கப்படுகின்றன. அசையா சொத்து ஆவணங்கள் அனைத்தையும் நகர ஊரமைப்புத் துறையினர் கோப்புகளாக பாதுகாக்க வேண்டியது அவசியம்.
ஆனால், அங்கீகரிக்கப்பட்ட மனைப்பிரிவு தொடர்பான கோப்பு ஒன்று மாயமாகி விட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தற்போது தெரிய வந்துள்ளது. இதை விசாரித்த மாநில தகவல் ஆணையம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மனு அளித்த தியாகராஜன் கூறியதாவது: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 56-வது வார்டில் நகர ஊரமைப்புத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மனைப்பிரிவின் கோப்புகளைப் பார்வையிட அனுமதி கேட்டு கடந்த 2013, டிசம்பரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தேன். ஆனால் அதற்கு முறையான பதில் கிடைக்கவில்லை.
இறுதியாக கடந்த 2014, அக்டோபரில் மாநில தகவல் ஆணையருக்கு 2-ம் மேல்முறையீட்டு மனு அனுப்பப்பட்டது. அதன் பிறகுதான் நான் கேட்ட கோப்பு மாயமானதாக பதில் வந்தது. கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த பதில் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே கடந்த அக்டோபர் மாதம் மாநில தகவல் ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தியது. விசாரணையில், நான் பார்வையிடுவதற்கு கேட்ட கோப்பு மாயமானது உறுதி செய்யப்பட்டது. கோப்பு காணாமல் போய்விட்டது என்றால் போலீஸில் புகார் அளிக்கப்பட்டதா? யார் பொறுப்பில் அந்த கோப்பு இருந்தது? என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
மேலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு கோப்பு காணாமல் போய்விட்டது எனக் கூறி தகவல் வழங்க மறுப்பது முறையானதல்ல எனவும் மாநில தகவல் ஆணையம் அறிவுறுத்தியது.
கோப்புகளை முறையாகப் பராமரிக்காதது, 30 நாட்களுக்குள் தகவல் வழங்க மறுத்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, பொது தகவல் அலுவலர்களாக பதவி வகித்தவர், உதவி ஆணையராக இருந்தவர்கள், இணை ஆணையராக இருந்தவர் என 4 பேர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிழக்கு மண்டலப் பிரிவில் சம்பந்தப்பட்ட கோப்புகளைத் தேடி, மனுதாரருக்குப் பார்வையிட வழங்க வேண்டுமென மாநகராட்சி ஆணையருக்கும் அறிவுறுத்தியுள்ளனர். இதுமட்டுமின்றி கோப்பு காணாமல் போனது குறித்து பிரமாண வாக்குமூலமாகவும் தகவல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டுமென கெடு விதித்துள்ளனர்.
தகவல் பெற விண்ணப்பிக்கும்போது மனுதாரர்களை அலைக்கழிக்கும் நிலை மாற வேண்டும். உண்மையான ஆவணங்கள் கிடைத்தால் மட்டுமே குறிப்பிட்ட மனைப்பிரிவு குறித்த உண்மைகள் வெளிவரும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விசாரணை
மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டிய கோப்பு மாயமாகியுள்ளது பல்வேறு சர்ச்சைகளையும், சந்தேகங் களையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டு அறிக்கை தயாரிக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றனர்.