Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

நிமிடத்துக்கு 11 லட்சம் லிட்டர் கழிவுநீர் கலப்பு; தாமிரபரணியின் நிலைமை மிக மோசம்: 4 மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்

திருநெல்வேலி சிந்துபூந்துறையில் தாமிரபரணியில் கழிவுநீர் கலக்கிறது.

திருநெல்வேலி

திருநெல்வேலியில் தாமிரபரணி யில் தங்குதடையின்றி கழிவுநீர் கலப்பதை தடுக்க அரசுத்துறைகள் அக்கறை செலுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தாமிரபரணி தனது பாதையில் கடக்கும் பெரிய நகரம் திருநெல்வேலி. தனது பாதையில் கடந்து வந்த அனைத்து நகரங்களையும்விட அதிகமானகழிவுகளை திருநெல்வேலியில்தான் அது சுமக்கிறது. திருநெல்வேலியில் கருப்பந்துறை முதல் வெள்ளக்கோயில் வரை 27 இடங்களில் ஆற்றில் சாக்கடை கலப்பதாகவும், திருநெல்வேலியில் மட்டும் நிமிடத்துக்கு 11 லட்சம்லிட்டர் கழிவு நீர் தாமிரபரணியில் கலப்பதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் 686 இடங்களில் தாமிரபரணியுடன் சாக்கடை கலக்கிறது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் ஆட்சியர் அலுவலகம் அருகேயும், சிந்துபூந்துறை பகுதியிலும் திறந்தவெளி கழிப்பிடமாகவும், பன்றிகள் வளர்க்கும் இடமாகவும் ஆற்றங்கரை மாறியிருக்கிறது. திருநெல்வேலி சந்திப்பிலுள்ள அனைத்து கடைகள், தங்கும் விடுதிகளின் கழிவுகள் சிந்து பூந்துறையில் ஆற்றுக்குள் விடப்படுகின்றன. சிந்துபூந்துறை ஆற்றங்கரை பகுதியில் குப்பைகளை கொட்டி தீவைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல்மாசு அதிகரித்திருக்கிறது.

ஆற்றங்கரை பகுதியை திறந்தவெளி கழிப்பிடமாகவும், கழிவுநீர் சங்கமிக்கும் பகுதியாகவும் மாற்றியிருப்பதால் பன்றிகள் அதிகளவில் உலாவருகின்றன. இவ்வாறு ஒரு நதியை கூவமாக்கும் முயற்சியில் அதிதீவிரமாக இறங்கியிருப்பதுதான் சோகம். திருநெல்வேலி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் அரைகுறையாக இருப்பதுதான் தாமிரபரணியில் கழிவுநீர் அதிகளவில் சேருவதற்கு காரணம் என்று, மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.

ஆற்று நீர் மாசுபட்டுள்ள நிலையில் இத்தண்ணீரைத்தான் உறைகிணறுகள் மூலம் உறிஞ்சி எடுத்து திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் நிலையுள்ளது. தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுக்க அரசுத்துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சமூக ஆர்வலர் காசிவிஸ்வநாதன் கூறும்போது, ‘‘பல ஆண்டுகளாக கழிவுநீர் கலக்கும் பெரியசாக்கடையாக தாமிரபரணி மாறிவருகிறது. இருசக்கர வாகனங்கள் முதல் சொகுசு பேருந்துகள் வரைஅனைத்தையும் நதிக்குள் இறக்கிகழுவி, தாமிரபரணியை அசுத்தம் செய்கின்றனர். மோட்டார் வாகனங்களில் இருந்து வெளியாகும் ஆயில்போன்றவை ஆற்றில் கலக்கிறது. அந்த நீரைத்தான் நாம் சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துகிறோம்.

இதனால், பாதிக்கப்படுவது அனைவரும்தான். தாமிரபரணி மகாபுஷ்கரம் நிகழ்ச்சி நடைபெற்ற போது பல்வேறு இடங்களில் சிறப்புயாகங்கள் வளர்க்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் புண்ணியநதியை வழிபட்டனர். ஆனால் தொடர்ந்துவந்த நாட்களில் ஜீவநதியை பழைய பொருட்களை வீசி எறியும் குப்பைதொட்டியாக மாற்றிவிட்டார்கள். தொடர்ந்து இதுபோன்ற நிலை நீடித்தால் தாமிரபரணி மற்றொரு கூவம் ஆறாக மாறிவிடும். நீரின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அரசு இதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம். இல்லையெனில் அடுத்த தலைமுறைக்கு இந்த இடம்தான் தாமிரபரணி பயணித்த இடம் என்று கூறவேண்டிய சூழல் உருவாகிவிடும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x