Published : 07 May 2021 10:03 PM
Last Updated : 07 May 2021 10:03 PM

நல்லாட்சி துவக்கத்தின் நம்பிக்கை ஒளிக்கீற்று: தமிழக முதல்வரின் முதல் ஐந்து அறிவிப்புகளுக்கு விசிக வரவேற்பு

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் செய்துள்ள முதல் ஐந்து அறிவிப்புகளும் நாடு பாராட்டும் நல்லாட்சியை அவர் வழங்குவார் என்ற நம்பிக்கையை உறுதி செய்திருக்கின்றன.

இந்த அறிவிப்புகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பாராட்டி வரவேற்கிறோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூன் மூன்றாம் தேதி முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிவாரண நிதியை இப்போதே வழங்க வேண்டும்; முதலமைச்சரின் முதல் கையெழுத்து அதற்கானதாக இருக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

அதனை ஏற்கும் வகையில் நான்காயிரம் ரூபாய் நிவாரண நிதியில் முதல்கட்டமாக 2000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அதனால் 2 கோடியே 7 லட்சத்து 67 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் முதல் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்ததன் மூலமும்,

பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்ததன் மூலமும் ஏழை எளிய நடுத்தர மக்களின் வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் தமிழக முதல்வர் செய்திருக்கிறார்.

அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்வதற்கு 1200 கோடி ரூபாய் செலவிலான திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான கோப்பில் முதல்வர் கையொப்பமிட்டு இருக்கிறார்.

‘வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்னும் பாரதியின் கனவை நனவாக்கும் விதமாகத் தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறார்.

மக்களின் குறைகளை 100 நாட்களுக்குள் தீர்த்துவைப்போம் என்ற வாக்குறுதிக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அதற்கென்று தனியே ஒரு துறையை உருவாக்கி ஐஏஎஸ் அதிகாரி ஒருவரையும் அமர்த்தி இருக்கிறார்.

வாக்குறுதிகள் தருவது வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமல்ல; அவற்றை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று முதல்வர் நிரூபித்திருக்கிறார்.

இன்று முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ள ஐந்து கோப்புகளும், பிறப்பித்துள்ள ஐந்து ஆணைகளும் தமிழகத்தில் நல்லாட்சி துவங்கிவிட்டது என்கிற நம்பிக்கையை மக்களுக்கு அளித்துள்ளன.

மேலும் பல்வேறு சிறப்பான திட்டங்களைச் செயல்படுத்தி இருண்டு கிடக்கும் தமிழகத்தில் ஒளிபரவச் செய்யவேண்டும் என முதல்வரை வாழ்த்துகிறோம்.

அதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றென்றும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x