Published : 07 May 2021 06:40 PM
Last Updated : 07 May 2021 06:40 PM

மதுரையில் கரோனா பரிசோதனை முடிவு வெளியாவதில் தாமதம்: நோயாளிகள் சிகிச்சையை உடனே தொடங்க முடியாமல் தவிப்பு

மதுரையில், தனியார் மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் வெறும் 4 மணி நேரத்தில் கரோனா பரிசோதனை முடிவு வழங்கப்படும் நிலையில் சுகாதாரத்துறை மூலம் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் வெளியாதற்கு 2 முதல் 3 நாட்கள் ஆகிவிடுகின்றன.

அதனால், நோயாளிகள் உடனடியாக கரோனா சிகிச்சை மட்டுமில்லாது மற்ற சிகிச்சைகளையும் தொடங்க முடியாமல் நோய் பாதிப்பு தீவிரமடைவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் புறநகர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

மாநகராட்சி சார்பில் 157 இடங்களில் நடமாடும் வானகங்கள் மூலம் மருத்துவக் குழுவினர் நேரடியாக மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குச் சென்று கரோனா பரிசோதனை செய்கின்றனர்.

இந்த பரிசோதனை மாதிரிகள் அனைத்தையும் சேகரித்து மதுரை அரசு மருத்துவக்கல்லூரி வைரலாஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்படுகின்றன. அவர்கள் இந்த மாதிரிகளை அதன் சீரியல் நம்பர் அடிப்படையில் ஆய்வு செய்து அதன் முடிவு ‘பாசிட்டிவ்’வாக இருந்தால் சம்பந்தப்பட்ட நோயாளியின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை ‘நெகட்டிவ்’வாக இருந்தால் அழைத்துச் சொல்வதில்லை. ‘நெகட்டிவ்’ என்பதற்கான சான்றிதழை மதுரை அரசு மருத்துவக்க்லூரி வைரலாஜி துறையில் அதற்காக ஒதுக்கப்பட்ட கவுண்டரில் வந்து வாங்க வேண்டிய உள்ளது.

ஏனெனில், தனியார் மருத்துவமனையில் ‘கரோனா’ தவிர்த்து மற்ற அவசர நோய்களுக்கு கரோனா பரிசோதனை செய்து அதன் முடிவுகள் ‘நெகட்டிவ்’வாக இருந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனர்.

‘பாசிட்டிவ்’வாக இருந்தால் போதிய படுக்கை வசதியில்லாமல் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவிடுகின்றனர். அதனால், ‘கரோனா’ பரிசோதனை முடிவு, அதன் நோயாளிகளுக்கு மட்டுமில்லாது மற்ற நோய்களுக்கு சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்கும் முக்கியமானதாக உள்ளது.

பொதுவாக ‘கரோனா’ அறிகுகளுடன் ஒரு வாரம் இருந்தவர்களே, பரிசோதனைக்கு மாதிரிகளை கொடுக்க வருகிறார்கள். அதன்பிறகு முடிவுகள் வருவதற்கு 2 அல்லத 3 நாட்கள் தாமதமாகுவதால் நோயாளிகள் சிகிச்சை எடுப்பதற்கு ஒரு வாரம் முதல் 10 நாட்களாகிவிடுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் ‘கரோனா’ பரிசோதனை முடிவுகள் இருந்தால் மட்டுமே சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். அதனால், வசதிபடைத்தவர்கள் தனியார் மருத்துவ ஆய்வகங்களில் ‘கரோனா’ பரிசோதனை செய்து 4 மணி நேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்கின்றனர்.

ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்வதால் அதன் முடிவுக்காக சிகிச்சை தொடங்காமல் நோய்த் தொந்தரவுகளுடன் வீட்டிலே முடங்கி கிடக்கின்றனர்.

கடைசி நேரத்தில் மூச்சுத்திணறலுடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால் பலர் இறந்து விடுகின்றனர். தற்போது அரசு மருத்தவமனையில் படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள், பரிசோதனை முடிவுகள் கிடைத்தாலும் உடனே மருத்துவமனைகளில் சேர்ந்துவிட முடியாது.

அதற்காக காத்திருக்க வேண்டிய உள்ளது. அப்படியே கிடைத்தாலும் சாதாரண படுக்கைகளே கிடைக்கிறது. ஆக்ஸிஜன் படுக்கைகள் தீவிர நோயாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பிவழிவதால் நோயாளிகளுக்கு அங்கு சிகிச்சைப்பெற முடியாமல் அரசு மருத்துவமனைகளில் அலைமோதுகின்றனர்.

இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், ‘‘வெளிநாடுகளுக்கு அவசரமாக செல்வோருக்கு கரோனா பரிசோதனை முடிவுகள் 48 மணி நேரத்தில் தேவைப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பரிசாதனை செய்பவர்களுக்கு 48 மணி நேரத்தில் முடிவுகளைப் பெறுவது சாத்தியமில்லை. அதனால், வெளிநாடுகளுக்கு செல்வோர் தனியாரை நாடுகின்றனர். கடந்த ஆண்டு பரிசோதனை முடிவுகள் மறு நாளே அவரவர் செல்போன் எண்களுக்கு நேரடியாக வந்தன. அதற்கான சான்றிதழ்களை அரசு மருத்துவக்கல்லூரி ‘வெப்சைட்’டில் டவுன் லோடு செய்யும் முறை இருந்தது.

ஆனால், தற்போது அப்படியில்லை. 2 முதல் 3 நாட்கள் கழித்து பரிசோதனை முடிவுகள் வருவதோடு ‘நெகட்டிவ்’ சான்றிதழை நேரடியாக வந்து வாங்கும்நிலை உள்ளது.

கரோனா தொற்று பரவலைத் தடுக்க எங்கும் கூட்டம் கூடக்கூடாது என்று சொல்லும் அரசு, சான்றிதழ் பெறுவதற்காக ஒரே இடத்தில் அனைவரையும் வரழைப்பது ஆபத்தானது.

சான்றிதழ் பெற வருபவர்களில் ‘பாசிட்டிவ்’ பெற்றவர்களாக இருக்கக்கூடும் அல்லது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களாகவும் இருக்கலாம்.

அதனால், முன்போல் பரிசோதனை செய்த மறுநாளே அவரவர் செல்போன் எண்களுக்கு முடிவுகளை அனுப்ப சுகாதாரத்துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும், ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x