Last Updated : 07 May, 2021 06:23 PM

 

Published : 07 May 2021 06:23 PM
Last Updated : 07 May 2021 06:23 PM

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை தொடங்க ஏற்பாடு: ஆட்சியர் தகவல்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருவதாக மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆக்சிஜன் பற்றாக்குறையால் 4 பேர் உயிரிழந்ததாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன், உயிரிழந்த 4 பேரும் வெவ்வேறு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாகவும், மருத்துவமனையில் போதுமான அளவுக்கு ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்பு வார்டு, கரோனா தனிமைப்படுத்தும் அவசர சிகிச்சை வார்டில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் இன்று (மே.7) திடீர் ஆய்வு நடத்தினார்.

கரோனா பாதுகாப்பு உடை அணிந்து மாவட்ட ஆட்சியர், கரோனா சிறப்பு வார்டுக்குள் சென்று அங்கு சிகிச்சையில் இருந்த கரோனா நோயாளிகளிடம் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும், ஆக்சிஜன் அளவு, அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள கரோனா தனிமைப்படுத்தும் சிறப்பு வார்டுக்குச் சென்ற மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், அங்கு தரைத்தளம், முதல் தளம் ஆகியவற்றில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உடல் நிலை, மருத்துவ சிகிச்சை குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் கூறியதாவது:

‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதேபோல, மருத்துவர்களும், செவிலியர்களும் கூடுதலாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இருப்பு தினசரி கண்காணிக்கப்பட்டு, நோயாளிகளுக்குச் சீரான ஆக்சிஜன் வழங்க போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரோனா நோயாளிகளுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கவும், உயிரிழப்புகளைக் குறைக்க கூடுதல் கவனம் செலுத்தவும் சுகாதாரத் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரோனா நோயாளிகளுடன் உறவினர்கள் இருக்க அனுமதியில்லை. நோயாளிகளைக் கவனிக்க மருத்துவர்களும், செவிலியர்களும் இருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் சுழற்சி முறையில் மருத்துவர்களும், செவிலியர்களும் பணியில் ஈடுபட்டு வருவதால் உறவினர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.

ஆட்சியர் ஆய்வின்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திலீபன், மருத்துவர்கள் பிரபாகரன், ஜனனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நோயாளிகளின் உடல்நிலை குறித்து வெளியில் இருந்தபடி கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். கரோனா வார்டுக்குள் நுழைந்து நோய்த் தொற்றுக்கு ஆளாக வேண்டாம். ஒவ்வொரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று (6-ம் தேதி) முதல் புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

அரசின் புதிய கட்டுபாடுகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை தவிர மற்ற அனைத்துக் கடைகளும் மூடியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

தேவையில்லாமல் யாரும் வெளியே வர வேண்டாம். குறிப்பாகக் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். முகக்கவசம் அவசியம், தனிமனித இடைவெளியும் அவசியம் என்பதை மக்கள் உணர வேண்டும். அரசு சார்பில் விழிப்புணர்வு தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. அதை மக்கள் பின்பற்ற வேண்டும். மக்கள் நினைத்தால் மட்டுமே கரோனாவை விரட்டியடிக்க முடியும். அரசு கூறும் அறிவுரைகள் நமக்கானவை என மக்கள் உணர வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு வந்து பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

கரோனா பரிசோதனைக்கான முடிவுகளை விரைவாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஏற்பாடுகள் விரைவாக நடந்து வருகின்றன’’.

இவ்வாறு ஆட்சியர் சிவன் அருள் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x