

தமிழகத்தின் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் மாற்றப்பட்டு, புதிய தலைமைச் செயலாளராக இறையன்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஸ்டாலின் தலைமையில் புதிய அமைச்சரவை பொறுப்பேற்றது. புதிய அரசு அமைந்தால் பழைய அரசின் அதிகாரிகள் மாற்றப்படுவது வழக்கமான ஒன்று. இதில் தலைமைச் செயலாளரும் அடக்கம். ஒரே ஒரு மாற்றம், காவல்துறை சட்டம்-ஒழுங்கு டிஜிபி திரிபாதியை மட்டும் அவரது பதவிக் காலம் முடியும் வரை மாற்ற முடியாது.
காரணம், காவல்துறையின் ஒட்டுமொத்தத் தலைவராக நியமிக்கப்படுபவர் அவரது பதவிக் காலம் முடியும் 2 ஆண்டுகளுக்கு மாற்றப்படக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவர் மாற்றப்பட வாய்ப்பில்லை. ஜூன் 30 வரை அவர் பதவியில் இருப்பார். இந்நிலையில் தலைமைச் செயலர் மாற்றப்படுவார் என்று தகவல் வெளியானது.
ஸ்டாலின் பதவியேற்பு நிகழ்ச்சிவரை பொறுப்பிலிருந்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று மாலை மாற்றப்பட்டார். அவர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.
அண்ணா மேலாண்மை பயிற்சி மைய இயக்குனராகப் பதவி வகிக்கும் இறையன்பு புதிய தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1988ஆம் ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்று பணியில் இணைந்தவர். இவருக்கு மேலே 12 ஐஏஎஸ் அதிகாரிகள் சீனியர்களாக உள்ள நிலையில், இறையன்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இறையன்பு பின்னணி:
சேலம் மாவட்டத்தில் காட்டூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர் இறையன்பு. வேளாண்துறையில் இளங்கலைப் பட்டம், சைக்காலஜியில் முதுகலைப் பட்டம், இந்தியில் எம்பிஏ பட்டம், எம்.ஏ. தொழிலாளர் மேலாண்மை, எம்.ஏ. ஆங்கிலம், வணிக நிர்வாகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். வள்ளுவர்- ஷேக்ஸ்பியர் குறித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.
இவருடைய சகோதரர் திருப்புகழும் ஆட்சியரே. குஜராத் மாநில கேடராக உள்ளார்.
ஆட்சிப் பணித்தேர்வில் 15-வது ரேங்க் எடுத்து மாநிலத்தில் சிறந்த சிவில் தேர்வு பெற்ற மாணவராக 1987-ல் தேர்வானார். 1988ஆம் ஆண்டு சிறு சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் சிறந்த ஆட்சியருக்கான விருதை இறையன்பு பெற்றுள்ளார்.
நாகை துணை ஆட்சியராக ஆட்சிப் பணியைத் தொடங்கியவர், நகராட்சி நிர்வாக ஆணையர், செய்தி ஒளிபரப்புத் துறைச் செயலர், முதல்வரின் கூடுதல் செயலர், சுற்றுலாத்துறைச் செயலர் எனப் பல பதவிகளை வகித்துள்ளார்.
கடலூர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராகப் பதவி வகித்தவர். தமிழ் மீது பற்று கொண்டவர். 50க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். வாழ்வியல் சம்பந்தமாக மேடைகளில் சிறப்பாகப் பேசக்கூடியவர்.
தற்போது இவர் தலைமைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்த இவர் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30 அன்று ஓய்வு பெறுகிறார்.