Published : 07 May 2021 05:25 PM
Last Updated : 07 May 2021 05:25 PM

அதிமுக பதவி, நியமனங்களுக்கு எதிரான வழக்கு: ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, மதுசூதனனுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

அதிமுகவில் புதிய பதவி நியமனங்கள் மேற்கொள்ளத் தடை விதிக்கக் கோரி அக்கட்சியின் உறுப்பினர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக கட்சி விதியின்படி, பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அவரது மனுவில், “ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தற்காலிகப் பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சொத்து வழக்கில் சசிகலா சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தற்போதைய ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து பொதுக்குழுக் கூட்டத்தைக் கூட்டி, பொதுச் செயலாளர் பதவியை நீக்கித் தீர்மானம் நிறைவேற்றினர்.

பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு முரணானது. கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டைத் தலைமையை உறுப்பினர்கள் விரும்பவில்லை.

2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உட்கட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சித் தேர்தலை நடத்த அதிமுகவுக்கு உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020 ஆகஸ்ட் மாதத்தில் மனு அளித்தேன்.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்தனர். ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தப்படவில்லை.

கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்படக் கட்சிக்குத் தடை விதிக்க வேண்டும். பழைய விதிகளின்படி கட்சி செயல்பட உத்தரவிட வேண்டும். மேலும், கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத் தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்குத் தடை விதிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் .

இந்த மனுவை விசாரித்த சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம், மனுவுக்கு ஜூலை 7ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x