

தமிழகத்தில் பழநி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.
திண்டுக்கல் அருகே காந்திகிராமத்தில் உள்ள கஸ்தூரிபா குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தை தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி மற்றும் உறுப்பினர் வி. ராமராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அங்கு பராமரித்து வளர்க்கப்படும் குழந்தைகளைப் பார்த்தனர். குழந்தைகள் மிக ஆரோக்கியமான சூழலில் வளர்க்கப்படுவதாக பாராட்டு தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையமானது தமிழகத்தில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்யும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இதன் முதல்கட்டமாக பழனி தண்டாயுதபாணிசுவாமி கோயில், கோவையில் உள்ள மருதமலை திருமுருகன் கோயில், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயில், சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மற்றும் திருத்தணியில் உள்ள முருகன் கோயில், வேளாங்கண்ணி மற்றும் நாகூரில் உள்ள ஆலயங்கள் ஆகியவற்றில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தலங்களில் குழந்தைகள் பாதுகாப்புக்கான செயல் திட்டம் உருவாக்கப்பட்டு அதன் பின்னர் கோயில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் பேசி இந்த திட்டம் அமல்படுத்தப்படும்.
பழனி கோயில் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக ஆணையத்தின் உறுப்பினர் வி. ராமராஜ் செயல்படுவார், என்றார்.