

ஐந்து கோப்புகளில் முதல் நாளில் முதல்வர் கையெழுத்திட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கமாகும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மே 07) வெளியிட்ட அறிக்கை:
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை பொறுப்பேற்றதும், அலுவலகம் சென்ற முதல்வர்,
* கரோனா நோய்த் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் சூழலில், மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு உடனடியாக குடும்பத்திற்கு தலா இரண்டாயிரம் ரூபாய் ரொக்கப் பண உதவி
* ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைப்பு
* அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நகரப் பேருந்துகளில் உழைக்கும் பெண்களும், உயர்கல்வி பயிலும் மாணவியரும் கட்டணமில்லாமலும், பயண அட்டை இல்லாமலும் பயணம்
* தேர்தல் பரப்புரையின் போது மக்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது நூறு நாட்களில் தீர்வு காண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை செயல்படுத்த தனித்துறை
* கரோனா நோய்த் தாக்குதலில் பாதிக்கப்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நோய் சிகிச்சைக்கான செலவுகளை தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்குவது
- என ஐந்து கோப்புகளில் முதல் நாளில் முதல்வர் கையெழுத்திட்டிருப்பது மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் நல்ல தொடக்கமாகும்.
நோய்த் தொற்று பரவும் சூழலில் பரிதவித்து நிற்கும் சாதாரண மக்களுக்கு நம்பிக்கையூட்டி ஆற்றுப்படுத்தும் முதல்வரின் நடவடிக்கையை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு மகிழ்ச்சியுடன் வரவேற்று, நன்றி பாராட்டுகிறது".
இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.