தமிழகத்தின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்: வைகோ புகழாரம்

தமிழகத்தின் எதிர்காலம் வெளிச்சமாக இருக்கும்: வைகோ புகழாரம்
Updated on
1 min read

முதல்வர் ஸ்டாலினின் அறிவிப்புகள் தமிழகத்தின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கும் என்ற வெளிச்சத்தைக் காட்டுவதாக வைகோ புகழாரம் சூட்டியுளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று தனியார் தொலைக்காட்சியிடம் பேசும்போது, ''சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று கூறியது மட்டுமல்ல, முதல்வராகப் பொறுப்பேற்ற சில மணி நேரத்திற்குள்ளாகவே ஐந்து முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார் ஸ்டாலின்.

அடுத்த 5 ஆண்டுகளில் ஆயிரத்து 451 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ஏற்கெனவே ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் அதை 5 வாக்குறுதிகளோடு இன்றே தொடங்கி இருக்கிறார். இனி வரவுள்ள ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கான அடையாளம் இது.

அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம், பால் விலை லிட்டருக்கு ரூபாய் 3 குறைப்பு, உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதிக்குப் பெருமை சேர்க்கும் வகையில், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்ற சொல்வதற்கு இணங்க, ஸ்டாலின் இந்தத் திட்டங்களை அறிவித்திருக்கிறார். இது தமிழகத்தின் எதிர்காலம் பொன்மயமாக இருக்கும் என்ற வெளிச்சத்தைக் காட்டுகிறது'' என்று வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in