

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகப் பரவி வரும் தகவல் தவறானது என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, கமல் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டுச் செயல்படுவதாக எனக்குத் தெரியவில்லை, மாறிவிடுவார் என்கின்ற நம்பிக்கையும் இல்லை என்று கூறிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், நேற்று கட்சியில் இருந்து விலகினார். அவரது விலகலைக் கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை நிலையப் பொதுச் செயலாளரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர். சந்தோஷ் பாபு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
''மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாகத் தவறான தகவல் பரவி வருகிறது.
தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்களின் ராஜினாமா கடிதங்களைக் கட்சியின் தலைவர் கமல்ஹாசனிடம் கொடுத்தனர். தேர்தல் காலச் செயல்பாடுகளைக் காய்தல் உவத்தல் இன்றி ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு செய்வதற்கு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் கமலின் பரிசீலனையில் இருக்கின்றன.
கட்சியின் துணைத் தலைவராக இருந்த டாக்டர் ஆர்.மகேந்திரன் மட்டுமே கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும்''.
இவ்வாறு டாக்டர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.