

அமைச்சரவையில் இடம் கிடைக்காததில் வருத்தமில்லை என, உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (மே 07) காலை ஆளுநர் மாளிகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, எ.வ.வேலு உள்ளிட்ட 33 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மற்றும் அமைச்சர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். ஆளுநரின் தேநீர் விருந்திலும் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணிச் செயலாளரும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், "மகிழ்ச்சியாக இருக்கிறது. மகிழ்ச்சியான தருணம். தமிழ்நாட்டுக்குத் தேவையான ஒரு விஷயம் நிகழ்ந்துள்ளது. எங்கள் தலைவர், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், திமுகவினர் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள்" எனத் தெரிவித்தார்.
அப்போது, அமைச்சரவையில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறதா என, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, "உங்களுக்கு ஏதாவது வருத்தம் இருக்கிறதா? எனக்கு இல்லை" எனத் தெரிவித்தார்.