

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா 2-வது அலையின் தீவிரம் மிகக் கடுமையாக உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதில் தமிழகமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அரசியல் கட்சித் தலைவர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சரும் விராலிமலை தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான விஜயபாஸ்கருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''பொதுச் சுகாதார ஆய்வகத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில், எனக்கு கரோனா தொற்று இருப்பது இன்று உறுதியானது. சோதனைக்குப் பிறகு என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.
கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றி, பாதுகாப்புடன் இருக்க வேண்டுகிறேன்'' என்று விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரங்களில், அதிக அளவிலான மக்கள் கூட்டம் கூடியதைத் தொடர்ந்து கட்சித் தலைவர்கள், வேட்பாளர்கள் உட்படப் பலர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மீண்டது குறிப்பிடத்தக்கது.