

தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 2 அன்று நடந்தது. இதில் திமுக சார்பில் 125 பேர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, வென்றவர்கள் 8 பேர் என்று மொத்தம் 133 பேருடன் திமுக அறுதிப் பெரும்பான்மை பெற்றது.
இதைத் தொடர்ந்து ஸ்டாலின் இன்று (மே 7) காலை எளிய முறையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கிடையே தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ''தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எனது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்கள் விரும்பும் ஆட்சியை அவர் வழங்க வேண்டும். அதற்கான ஆலோசனைகளை பாட்டாளி மக்கள் கட்சி எப்போதும் வழங்கும்'' என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.