அமைச்சரவைக் கூட்டம், ஆட்சியர்களுடன் ஆலோசனை: முதல்வர் ஸ்டாலினின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகள்
முதல்வராக பொறுப்பேற்ற ஸ்டாலின் அடுத்து இன்றிலிருந்தே அவர் தனது பணிகளை தொடங்கினார். இரவு 7 மணி வரை ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். முதல்வர் ஸ்டாலினாக மகிழ்ச்சியுடன் பதவி ஏற்றுக்கொண்டாலும் அவர் பொறுப்பேற்கும் நேரம் தமிழகம் மிக இக்கட்டான நிலையில் உள்ளது. கரோனா பரவலின் இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதற்காக தலைமைச் செயலர், சுகாதாரத்துறைச் செயலருடன் ஆலோசனை, தொடர்ந்து அமைச்சர்களுடன் ஆலோசனை என தமிழக கரோனா பரவல் அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
அதற்கு முன் பதவி ஏற்றவுடன் கோபாலபுரம் இல்லம் சென்று கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். பதவியேற்றப்பின் நேராக கோபாலபுரம் சென்ற ஸ்டாலின் அங்கு மலர்மாலையுடன் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை வணங்கும்போது இதைப்பார்க்க தந்தையில்லையே என கண்ணீர் விட்டார்.
திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்றப்பின் முதலில் கோபாலபுரம் இல்லம் வந்தார். அங்கு அவரை அவரது சகோதரி செல்வி வரவேற்றார். உள்ளே சென்ற ஸ்டாலினை உறவினர்கள் வரவேற்றனர்.
நேராக கருணாநிதியின் அறைக்குச் சென்ற ஸ்டாலின் அவரது உருவப்படத்துக்கு பூக்களைத்தூவி வணங்கினார். அப்போது திடீரென கண்ணீர் விட்டப்படி அப்பா நம்மிடம் இல்லையே என சகோதரி செல்வியிடம் கூறினார். அவர் கைகளைப்பிடித்துக்கொண்டு தோளில் சாய்ந்து ஆறுதல் கூறினார். கண்கலங்கியபடி வந்த அவரை அமிர்தம் தேற்றினார். அவரது காலில் விழுந்து ஸ்டாலின் வணங்கினார்.
தேர்தல் பிரச்சாரத்துக்குப்பின் ஒருவித இறுகிய மனநிலையுடன் அமைதியாகி விட்டார் ஸ்டாலின். தேர்தல் வெற்றியை பெரிதாக முகத்தில் காட்டிக்கொள்ளாமல் அமைதியாகவே இருந்தார். தொடர்ந்து அப்பாவின் சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தியபோதும் யாருடனும் பேசாமல் அமைதியாக சில நொடிகள் வெறித்து பார்த்துவிட்டுச் சென்றார்.
இன்று பதவி ஏற்றபோதும் பெரிதாக மகிழ்ச்சியை முகத்தில் காண்பிக்காமல் அமைதியாகவே பதவி ஏற்றார். பின்னர் கோபாலபுரம் இல்லம் வந்தார். அங்குதான் முதன் முதலாக தனது உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர் தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசிப்பெற்றார். பின்னர் அண்ணா சமாதிக்கு சென்று வணங்கினார், அதைத்தொடர்ந்து கருணாநிதி சமாதியை வணங்கிய அவர் அங்கிருந்து பெரியார் சமாதிக்குச் சென்றார். அங்கு அவரை கி.வீரமணி வரவேற்றார். பெரியார் சமாதியை வணங்கினார்.
தமிழக முதல்வராக கருணாநிதி இருந்தபோது பெரியார் சமாதிக்கு வந்து வணங்குவார். அதன் பின் 10 ஆண்டுகள் அதிமுக முதல்வர்கள் பெரியார் சமாதிக்கு வந்ததில்லை. 10 ஆண்டுகளுக்குப்பின் ஸ்டாலின் முதல்வராக பெரியார் சமாதியை வணங்கியுள்ளார். பின்னர் அங்கிருந்து க.அன்பழகன் இல்லம் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் தலைமைச் செயலகம் சென்று தனது அறையில் அமர்ந்து கோப்பில் கையெழுத்திடுகிறார்.
பின்னர் இல்லம் திரும்பும் அவர் மாலை 4 மணிக்கு மீண்டும் தலைமைச் செயலகம் செல்கிறார். அங்கு தலைமைச் செயலர் சுகாதாரத்துறைச் செயலருடன் ஆலோசனை நடத்துகிறார், பின் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆலோசனை நடத்துகிறார் பின்னர் அமைச்சரவை கூட்டத்தில் கலந்துக்கொள்கிறார். பின்னர் இல்லம் திரும்புகிறார்.
