Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தமிழக அரசு விரைவாக செயல்பட்டு 69% இடஒதுக்கீட்டை காப்பாற்ற வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி வலியுறுத்தல்

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள69 சதவீத இடஒதுக்கீட்டு முறையை காப்பாற்ற தமிழக அரசு விரைவாக செயல்பட வேண்டும் என்று அதிமுகஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் வலியுறுத்திஉள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

மகாராஷ்டிராவில் ‘மராத்தா’ சமூகத்தினருக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் அளிக்கப்பட்ட தனி, உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசனஅமர்வு நேற்று அளித்துள்ள தீர்ப்பின்எதிரொலியாக, தமிழகத்தில் நடைமுறையில் 69 சதவீத இடஒதுக்கீடு என்னவாகுமோ என்ற கவலையும் அச்சமும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு கல்வி நிறுவனங்கள், வேலை வாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்து, 1993-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் இதற்கு தனியாக சட்ட முறையை நிறைவேற்றி, அதை சட்டமாக்கி, மத்திய அரசின் ஒப்புதலுடன், சட்டப் பாதுகாப்பு வழங்கி அரசியலமைப்பு சட்டத்திருத்தம் செய்யப்பட்டு, 9-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 102-வது திருத்தத்தின்படி, மாநிலஅரசுகள் தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் சேர்க்கை, அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரையை மட்டுமே மத்திய அரசுக்குசெய்ய முடியும் என்று இப்போதுசட்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பன்முகத் தன்மையால் வெவ்வேறு விதமாக செயல்படுத்தப்படும் இடஒதுக்கீட்டுக் கொள்கையின் ஆன்மாவை சிதைத்துவிடும் என்ற அச்சம் எழுகிறது.

அரசமைப்புச் சட்டத்திருத்தம் 102 என்பது மத்திய அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பு மற்றும்மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வதற்கு மட்டுமே பொருந்தும். எனவே, அரசமைப்பு சட்டத்தின் 102-வது திருத்தம் மாநிலஅரசுகள், அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் இடஒதுக்கீடுசெய்வது குறித்த அதிகாரத்தை பறிக்கவில்லை என்று மத்திய அரசின்தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் மிகத் தெளிவாக உச்ச நீதிமன்றத்தில் வாதாடியுள்ளார்.

ஏழை, உழைக்கும் வர்க்க, சாமானிய மக்கள், கல்வி, அரசு வேலைவாய்ப்பு பெறவும், அதன் மூலம் சமூக நீதி நிலைநாட்டப்படவும் இடஒதுக்கீட்டு முறை மிகச்சிறந்த வழி என்பதால், தமிழக அரசு உடனடியாக சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகளைப் பெற்று 69 சதவீத இடஒதுக்கீடு காப்பாற்றப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித் துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x