வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சிகளில் முதல்வர் பதவியேற்பு விழாவை நேரலையில் காணுங்கள்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சிகளில் முதல்வர் பதவியேற்பு விழாவை நேரலையில் காணுங்கள்: திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
Updated on
2 min read

முதல்வர், அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை வீடுகளில் இருந்தபடி தொலைக்காட்சிகளின் நேரலையில் காணுமாறு திமுக தொண்டர்களுக்கு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

தமிழர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளிவிளக்காய், நம் நாட்டுக்கு எப்போதும் நற்பணியாற்றும் தொண்டனாய்த் திகழ்ந்துவரும் திமுக மீது நம்பிக்கை வைத்து, தமிழக மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். 5 முறை தமிழகத்தை ஆண்ட திமுகவுக்கு இப்போது 6-வது முறையாக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அரிய வாய்ப்பை மக்கள் மனமுவந்து வழங்கியுள்ளனர்.

அண்ணா அலங்கரித்த நாற்காலியில், கருணாநிதி கோலோச்சிய பொறுப்பில் திமுக எம்எல்ஏக்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

சட்டப்பேரவை திமுக கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்கு தமிழக முதல்வராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்து வைக்க இருக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். பேரவை உறுப்பினர்களது ஆதரவுக் கடிதத்தை நேற்று (மே 5) ஆளுநரிடம் ஒப்படைத்தோம். மே 7 (இன்று) காலை 9 மணி அளவில் பதவி ஏற்புவிழா ஆளுநர் மாளிகையில் மிகஎளிய முறையில் நடைபெற இருக்கிறது. அப்போது அமைச்சர்களும் பொறுப்பேற்க இருக்கின்றனர்.

மே 7 தமிழக அரசியல்வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. மீண்டும் திமுக ஆட்சி, கருணாநிதியின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும், மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது. ரத்தமும், வியர்வையும் சிந்தி திமுகவின் வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து, அவர்களுக்கு முன்னால் பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்குக் காரணம்.

இந்த வெற்றிக்குக் காரணமானகதாநாயகர்கள் திமுக தொண்டர்கள்தான். அவர்களது அயராத உழைப்பால், அசைக்க இயலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி. அதனால் மிகப்பெரிய அளவில், தொண்டர்கள் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே சிந்தித்து வைத்திருந்தேன்.

ஆனால், கரோனா பாதிப்பால் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

ஒவ்வொரு தொண்டரின் உடல் நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, தொலைக்காட்சி நேரலையில் விழாவைக் காணுங்கள். தொண்டர்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில்இருந்தாலும், உள்ளத்தால் சென்னையில் எம்முடனேதான் இருப்பீர்கள் என்பதை அறிவேன். இந்தஉடன்பிறப்பு எனும் பாச உணர்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம்.

‘இத்தனை தொண்டர்களைப் பெற்றெடுக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் நாம்' என்றார் அண்ணா. தொண்டர்கள்இருக்கும் திசை நோக்கி வணங்கி, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்க தயாராகி வருகிறேன்.

தொண்டர்களது உழைப்பு, திமுக ஆட்சியை மலர வைத்தது. தொண்டர்களின் வாழ்த்து எங்களை பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in