Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த 2 வாரம் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்: பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

கரோனாவைக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக அடுத்த 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பெருகி வரும் வைரஸ் தொற்றுப் பரவலை தடுத்து நிறுத்துவதற்கு முழு ஊரடங்குதான் ஒரே வழிஎனும் நிலையில், அதை நடைமுறைப்படுத்த அரசு தயங்குவது மிகப்பெரிய கடமை தவறுதல் ஆகும்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது சாதாரணமான ஒன்றாகிவிட்டது. பெரும்பாலான உயிரிழப்புகள் உண்மையான காரணம் கூறப்படாமல் மூடி மறைக்கப்படுகின்றன.

நோயாளிகள் எண்ணிக்கை

ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் ஆகியவற்றுக்கு கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதற்கு காரணம் மருத்துவமனையில் மருத்துவம் பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதுதான்.

தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்கான ஒரேவழி முழு ஊரடங்கை அறிவித்து, அதைமிகக் கடுமையாக நடைமுறைப்படுத்துவதுதான்.

முதலில் இரு வாரங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கரோனா பரவல் சங்கிலியை அறுத்தெறிய முடியும். அதன்பின்னர் மேலும் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கை நீட்டிப்பதன் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

3 வாரங்கள் மட்டும் முழுஊரடங்கை நடைமுறைப்படுத்துவதால், பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்படாது.

ரூ.5 ஆயிரம் நிதியுதவி

ஊரடங்கால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளைப் போக்க ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதல் கட்டமாக ரூ.5 ஆயிரம் நிதியுதவி உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x