Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

தமிழக அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்கள் புறக்கணிப்பு: அதிருப்தியில் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட மக்கள்

திருச்சி/பெரம்பலூர்

திமுக அமைச்சரவையில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது அம்மாவட்ட மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தனிப் பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்க உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய மத்திய மண்டலமான டெல்டா மாவட்டங்களை உள்ளடக்கிய பழைய திருச்சி மாவட்டம் பெரும் பங்காற்றியுள்ளது. இங்குள்ள 41 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 37 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவற்றில் திமுக மட்டும் 28 தொகுதிகளில் வென்றுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மட்டும் மொத்தமுள்ள 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 15 தொகுதிகளை திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கைப்பற்றியுள்ளன. இவற்றில் திமுக மட்டுமே 10 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்நிலையில், புதிய அமைச்சரவையில் திருவாரூர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி டிஆர்.பி.ராஜா, கும்பகோணம் சாக்கோட்டை க.அன்பழகன், திருவையாறு துரை.சந்திரசேகரன் உள்ளிட்டோரில் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என திமுகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், நேற்று வெளியான அமைச்சரவை பட்டியலில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலிருந்து யாரும் அமைச்சரவைப் பட்டியலில் இடம்பெறாததால், இம் மாவட்டங்களைச் சேர்ந்த திமுகவினர் மற்றும் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இதுகுறித்து திருவாரூரைச் சேர்ந்த மூத்த திமுக முன்னோடி ஒருவர் கூறியது: ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் மறைந்த மன்னை நாராயணசாமி, கோ.சி.மணி ஆகியோர் பலம் வாய்ந்த அமைச்சர்களாக திமுக ஆட்சியில் இருந்துள்ளனர். அதன் பிறகு சி.ந.மீ.உபயதுல்லா, உ.மதிவாணன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்தனர்.

குறிப்பாக, மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்து வளர்ந்த மண் இது. இந்த மாவட்டங்கள் திமுகவின் கோட்டையாகவே திகழ்கின்றன. ஆனால், தற்போது திமுக அமைச்சரவையில், 4 மாவட்டங்களில் ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது என்றார். இதனிடையே, டெல்டா மாவட்டங்களை சேர்ந்த திமுக எம்எல்ஏக்களில் இருவருக்கு சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா ஆகிய பதவிகள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

2001-06, 2011-16 ஆகிய ஆண்டுகளில் ஒரத்தநாடு வைத்திலிங்கம், நாகப்பட்டினம் ஜீவானந்தம், 2011-16-ம் ஆண்டில் நாகப்பட்டினம் ஜெயபால், 2011-16, 2016-21-ம் ஆண்டுகளில் நன்னிலம் ஆர்.காமராஜ், 2016-21-ம் ஆண்டில் வேதாரண்யம் ஓ.எஸ்.மணியன், பாபநாசம் மறைந்த துரைக்கண்ணு ஆகியோர், அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

26 ஆண்டுக்குப் பின் பிரதிநிதித்துவம்

திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகளைப் பிரித்து, 1995-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் உருவாகி 26 ஆண்டுகள் ஆகியும் தமிழக அமைச்சரவையில் இதுவரை பிரதிநிதித்துவம் கிடைக்காமல் இருந்து வந்தது. இம்மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏக்களில் சிலர் துணை சபாநாயகர், வாரியத் தலைவர் போன்ற பதவிகளில் இருந்தாலும், அமைச்சரவையில் இடம்பெறாதது பெரிய குறையாக இருந்தது.

இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டம்குன்னம் தொகுதி எம்எல்ஏவான எஸ்.எஸ்.சிவசங்கருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x