

வரலாற்று ஆய்வாளர் தஞ்சை வெ.கோபாலன் (85) தஞ்சையில் நேற்று உடல் நலக்குறைவால் காலமானார்.
நாகை மாவட்டம் தில்லையாடியில் 1936-ல் பிறந்த வெ.கோபாலன், தஞ்சாவூர் எல்ஐசி காலனியில் வசித்து வந்தார். ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகு, திருவையாறு பாரதி இயக்கத்தின், பாரதி இலக்கியப் பயிலக இயக்குநராக 2001 முதல் பொறுப்பேற்று, பாரதி குறித்த அஞ்சல்வழிப் பாடத்திட்டத்தை நடத்தி வந்தார்.
திருவையாறு வரலாறு, தஞ்சை மராட்டியர் வரலாறு, தஞ்சை நாயக்க மன்னர்கள் வரலாறு, வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகம், திருக்கோயில்களில் நாட்டியாஞ்சலி உட்பட 15 நூல்களை எழுதியு உள்ளார். திருவையாறு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை தலைவர், அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக சம்மேளனத்தின் தஞ்சை கோட்டப் பொறுப்பாளர் உள்ளிட்ட பொறுப்பு வகித்துள்ளார்.
தஞ்சை.வெ.கோபாலனின் உடல் நேற்று தஞ்சாவூரில் தகனம் செய்யப்பட்டது. இவருக்கு தர், சுரேஷ் என 2 மகன்கள், சாந்தி என்ற மகள் உள்ளனர்.