Published : 09 Dec 2015 02:45 PM
Last Updated : 09 Dec 2015 02:45 PM

தனியார் மருத்துவமனை இறப்பு விவகாரம்: சிபிஐ விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

மியாட் இறப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் பெய்த மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் புகுந்ததால் ஏற்பட்ட மின்தடை உள்ளிட்ட காரணங்களால் மியாட் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்தனர்.

அரசு மற்றும் மியாட் மருத்துவமனை தரப்பில் இந்த எண்ணிக்கை கூறப்படும் நிலையில், உண்மையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 40க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் நடந்தவை குறித்து வெளியாகியுள்ள உண்மைகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

மியாட் மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கு முழுக்க முழுக்க அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் ஆகும். அம்மருத்துவமனைக்கான கட்டிடங்களே சட்டத்திற்கு புறம்பாகத் தான் கட்டப்பட்டிருக்கின்றன. அடையாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் 3 தளங்கள் தரைமட்டத்திற்கு கீழே அமைந்திருக்கின்றன. வெள்ளம் பாதிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள இடத்தில் தரைக்கு கீழ் 3 தளங்களை அமைக்க 2009 ஆம் ஆண்டில் அப்போதிருந்த திமுக அரசு எந்த அடிப்படையில் அனுமதி அளித்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

அடுத்தபடியாக, செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து அளவுக்கு அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், அதுகுறித்து முன்கூட்டியே மருத்துவமனை நிர்வாகத்துக்கு அரசு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் தகவல் தெரிவிக்கப்படவில்லை. இது அரசுத்தரப்பில் நடந்த தவறாகும். மருத்துவமனை தரப்பிலும் பல தவறுகள் நடந்திருக்கின்றன. டிசம்பர் 1-ஆம் தேதி நள்ளிரவில் மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. அப்போதே மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு விட்டது. அதன்பின் ஜெனரேட்டர் மூலம் மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. டிசம்பர் 3 ஆம் தேதி மாலை வெள்ளத்தின் அளவு அதிகரித்ததால் ஜெனரேட்டரும் செயலிழந்தது. இதனால் தான் சுவாசக்கருவிகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

டிசம்பர் 1 ஆம் தேதி இரவு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததுடன், மின்சாரமும் தடைபட்ட நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த அனைத்து நோயாளிகளையும் உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் வேறு மருத்துவமனைகளுக்கு மாற்றியிருக்க வேண்டும். மருத்துவமனையில் ஹெலிபேட் இருப்பதால் இது சாத்தியமான ஒன்று தான். குறைந்தபட்சம் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டர் பழுதானால் தொடர்ந்து மின்சாரம் வழங்க மற்றொரு ஜெனரேடட்ருக்கு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால், இவற்றை மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை.

அதேநேரத்தில் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெளிநாட்டு நோயாளிகள் பலரை மருத்துவமனை நிர்வாகம் அவசர, அவசரமாக ஹெலிகாப்டர் மூலம் பெங்களூரில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்ததாகவும், அதனால் தான் இந்த விபத்தில் வெளிநாட்டு நோயாளிகள் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வெளிநாட்டு நோயாளிகளை காப்பாற்றிய நிர்வாகத்தால், உள்ளூர் நோயாளிகளையும் காப்பாற்றியிருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யாததன் மூலம் உள்ளூர் நோயாளிகளை மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டே கொலை செய்ததாகத் தான் கருத வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆனால், தமிழக அரசும், மருத்துவமனை நிர்வாகமும் இவற்றை மறைக்க முயல்கின்றன. இதுகுறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணனும், மருத்துவமனையின் தலைவர் மருத்துவர் பி.வி.ஏ.மோகன்தாசும் அளித்துள்ள விளக்கங்கள் முன்னுக்குப் பின் முரணாக உள்ளன.

‘‘ மருத்துவமனைக்குள் வெள்ளம் புகுந்ததால் மின் தடை ஏற்பட்டது. இதனால் சுவாசக் கருவிகள் செயலிழந்தன. அதனால் தான் நோயாளிகள் உயிரிழந்தனர்’’ என்று மோகன்தாஸ் கூறியிருக்கிறார். ஆனால், சுவாசக் கருவிகள் செயலிழந்ததால் நோயாளிகள் உயிரிழக்கவில்லை என்றும், உடல்நலக்குறைவு காரணமாகத் தான் கடந்த சில நாட்களாக 18 நோயாளிகள் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகிறார்.

மின்தடை மற்றும் அதனால் ஏற்பட்ட சுவாசக் கருவிகளின் செயலிழப்பு காரணமாகத் தான் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை தலைவரே ஒப்புக்கொண்ட பிறகு, உண்மையை சொல்ல வேண்டிய சுகாதாரத்துறை செயலர் மியாட்டின் மக்கள் தொடர்பு அதிகாரியாக மாறி உண்மையை மூடி மறைக்க முயல்வது ஏன்? எனத் தெரியவில்லை.

மருத்துவமனையில் வியாழக்கிழமை இறந்ததாக கூறப்படும் நோயாளிகளில் பலர் அதற்கு முன்பே இறந்திருக்கலாம் என்றும், அவர்களது உறவினர்களிடமிருந்து அதிக பணம் பறிக்கும் நோக்குடன் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பது போல கணக்குக்காட்டப்பட்டிருக்கலாம் என்று புகார்கள் எழுந்துள்ளன.

உதாரணமாக வடிவேல் என்ற 35 வயது இளைஞர் டிசம்பர் 3 ஆம் தேதி இறந்ததாகக் கூறி அன்றிரவு 10 மணிக்கு தான் அவரது உடல் வெளியே எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அன்று பகலில் அவரை சந்திக்க உறவினர்கள் முயன்றபோது அவர் நலமாக இருப்பதாகக் கூறி அனுமதிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால், ஆவணங்களில் அவர் டிசம்பர் 2 ஆம் தேதியே இறந்துவிட்டதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று அவரது நண்பர் பிரகாஷ் கூறியிருக்கிறார். அதேபோல், மோகன் என்பவர் வியாழக்கிழமை பகலில் உயிருடன் நலமாக இருப்பதாகக் கூறிய மருத்துவமனை நிர்வாகம், கடைசியில் புதன்கிழமையே அவர் இறந்து விட்டதாக கூறுவதாக அவரது சகோதரர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.

சாதாரணமாகவே கால், தொடை போன்ற பகுதிகளில் ஏற்படும் எலும்பு முறிவுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு முதுகுப்பகுதி மயக்க மருந்து (Spinal Anesthesia) அளிப்பதற்கு பதில் முழு மயக்க மருந்து (Most Unethical Hospital)அளிப்பதாகவும், மயக்கம் தெளியும் வரை அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருந்து அதற்காக அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

அதுமட்டுமின்றி, மியாட் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் அங்குள்ள வரவேற்பரையில் இருக்கும் ஒரு பெண், சாதாரணமாக வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட பல மடங்கு கட்டணத்தை செலுத்தும்படி கூறிவிட்டு, பின்னர் பேரம் பேசி குறைப்பார். நோயாளியின் உறவினர்கள் அவர் கூறும் கட்டணத்தை செலுத்தும் வரை நோயாளிக்கு சிகிச்சை தராமல் அவசர சிகிச்சைப் பிரிவில் தான் வைத்திருப்போம் என மிரட்டுவதுடன், அதற்கான கூடுதல் கட்டணத்தையும் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது.

மியாட் மீது ஏற்கனவே கூறப்படும் குற்றச்சாட்டுகளையும், இப்போது புதிதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளையும் வைத்துப் பார்க்கும் போது மருத்துவ தார்மீக நெறிமுறைகளை அறவே கடைபிடிக்காத மருத்துவமனை (Most Unethical Hospital) இது என்பது உறுதியாகியிருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மியாட் மருத்துவமனையில் கடந்த ஒன்றாம் தேதி வெள்ளம் புகுந்ததுமே அங்கு பணியாற்றி வந்த பெரும்பாலான மருத்துவர்களும், செவிலியர்களும் நோயாளிகளை அப்படியே விட்டுவிட்டு (Abandoned) ஓடி விட்டனர். இது மருத்துவ நெறிகளுக்கு எதிரான செயலாகும்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளரிடம் இதுபற்றி கேட்ட போது, இதை ஒப்புக்கொண்ட அவர்கள் எந்த பதிலும் அளிக்க மறுத்துவிட்டனர். 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள ஆம்ரி (AMRI) மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 90 நோயாளிகள் உயிரிழந்தனர். அப்போதும் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதேபோல் தான் இங்கும் நடைபெற்றிருக்கிறது. ஆம்ரி மருத்துவமனையில் நடந்த விபத்துக்காக அம்மருத்துவமனை மூடப்பட்டதுடன், அதன் இயக்குனர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் அதுபோன்ற நடவடிக்கை இங்கு எடுக்கப்படவில்லை. இதற்காக ஆட்சியாளர்களுக்கு பெரும் தொகை கொடுக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இத்தகைய சூழலில் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பின் மூலம் விசாரணை நடத்தப்பட்டால் உண்மை வெளிவராது. எனவே, மியாட் சாவுகள் குறித்து நடுவண் புலனாய்வுப் பிரிவு (சி.பி.ஐ) விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

மியாட் மருத்துவமனை நிர்வாகிகள் கைது செய்யப் படுவதுடன், முதல்கட்ட விசாரணை முடிவடையும் வரை அம்மருத்துவமனை செயல்பட தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குறைந்தபட்சமாக தலா ரூ.1 கோடி இழப்பீட்டுடன், அவர்கள் செலுத்திய மருத்துவ கட்டணத்தையும் திருப்பித்தர வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x