Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

வருவாய்த் துறையை தொடர்ந்து தக்கவைக்கும் தென்மாவட்டம்

திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை முதல்வராகப் பொறுப்பேற்கிறார். அவருடன் சேர்த்து மொத்தம் 34 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த துரைமுருகனுக்கு ஸ்டாலினின் அமைச்சரவையில் நீர்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எத்தனை அணைகள் எங்கெங்கே உள்ளன. அதன் கொள்ளளவு என்ன? அணைக்கு தண்ணீர் எங்கிருந்து வருகிறது. அணைகளில் உள்ள பிரச்சினைகள் என்ன? என்பது போன்ற புள்ளி விவரங்கள் அனைத்தையும் துரைமுருகன் விரல் நுனியில் வைத்திருக்கக் கூடியவர். அந்த வகையில் துரைமுருகனுக்கு அவருக்கு பிடித்த துறையே வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அமைச்சரவையில் இருமுறை அமைச்சராக இருந்த சாத்தூர் ராமச்சந்திரன் தற்போது வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை வருவாய்த்துறை அமைச்சராக நியமித்தார். அதற்குப் பின் கருணாநிதி அமைச்சரவையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஐ.பெரிய சாமி வருவாய்த் துறை அமைச்சராக இருந்தார்.

2011, 2016-ம் ஆண்டுகளில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்பி உதயகுமார் அமைச்சராக இருந்தார். தற்போது ஸ்டாலின் அமைச்சரவையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த சாத்தூர் ராமச்சந்திரன் வருவாய்த் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அமைச்சரவையில் தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இதுவரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தது இல்லை. ஆனால், ஸ்டாலின் அமைச்சரவையில் முதன்முதலாக தென்மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகண்ணப்பன் போக்கு வரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப் பட்டுள்ளார்.

இதுவரை எம்எல்ஏவாக மட்டுமே இருந்துவந்த துறைமுகம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் சேகர்பாபு முதன்முறையாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் அடிக்கடி மாலையணிந்து, விரதமிருந்து கோயில்களுக்குச் செல்லக்கூடியவர். அதனால், இந்தத் துறைக்கு மிகவும் பொருத்தமானவர் என ஸ்டாலின் நியமித்துள்ளார்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட் டத்தைச் சேர்ந்த ரகுபதி சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா அமைச்சரவையில் அங்கம் வகித்த இவர் பின்னர் திமுகவில் இணைந்து மத்திய அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவரான க.முத்துச்சாமி எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் 8 ஆண்டுகள் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். ஜெயலலிதா அமைச்சரவையிலும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தார்.

2010-ல் திமுகவுக்கு வந்த இவர் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் அமைச்சராகிறார்.

திருச்செந்தூர் தொகுதியைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணனும் அதிமுகவில் அமைச்சர் பதவி வகித்து நீண்ட இடைவெளிக்குப் பின் திமுகவில் மீன்வளத் துறை அமைச்சராகிறார்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் அன்பில் மகேஷ் (43). இவரது தாத்தா அன்பில் தர்மலிங்கம் முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதியின் அமைச்சரவையில் அமைச்சர் உள்ளாட்சி மற்றும் வேளாண் துறை அமைச்சராக பதவி வகித்தவர்.

தற்போது பல ஆண்டுகளுக்குப் பின் ஸ்டாலின் அமைச்சரவையில் அன்பில் தர்மலிங்கத்தின் பேரன் அமைச்சராகிறார். ஸ்டாலினின் அமைச்சரவையில் மிகவும் இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இதற்கு முன் வீட்டு வசதி, பத்திரப்பதிவு, வருவாய்த் துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமிக்கு தற்போது கூட்டுறவுத் துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக விவசாயிகள் மற்றும் அவர்கள் சார்ந்த முக்கியத் திட்டங்கள் கூட்டுறவுத் துறை மூலம் அமல்படுத்தப்படுவதால் தற்போது கூட்டுறவுத் துறை மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளது.

இதனால், இந்தத் துறைக்கு அனுபவம் வாய்ந்தவர் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஐ.பெரியசாமி கூட்டுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக, திமுகவில் கடந்த காலங்களில் தொழில் துறை அமைச்சர் பதவி வட மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கே வழங்கப்பட்டது. தற்போது தென்மாவட்டத்தைச் சேர்ந்த தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் துறையில் மிகவும் பின்தங்கியுள்ள தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது,

"ஸ்டாலின் ஒவ்வொருவரின் திறமையை அறிந்து வைத்து அவர் களுக்கு துறைகளை ஒதுக்கியுள்ளார்.

அதிமுகவில் சிறப்பாக செயல்பட்டு, திமுகவுக்கு வந்தபிறகும் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கே அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் கள் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்கள் என்பதற்காக அவர்களைப் புறக்கணித்துவிட முடியாது.

இளைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவே முக்கியத் துறை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறை நிர்வாகிகளையும் கட்சியில் வளர விட வேண்டும் என்பதாலேயே ஸ்டாலின் இந்த முடிவை எடுத்துள்ளார்,’’ என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x