

மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர் பட்டியலில் இடம்பிடித்ததுடன் முக்கிய துறைகளையும் பெற்றுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற நிலையில் யார், யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. இப்பட்டியலில் இடம்பெற பலரும் பல்வேறு வழிகளில் கடும் முயற்சியை மேற் கொண்டிருந்தனர். இந்நிலையில் அமைச்சர் பட்டியல் நேற்று மாலை வெளியானது. இதில் ஸ்டாலின் உட்பட 34 பேர் இடம் பெற்றுள் ளனர்.
இதில் மதுரை உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களைச் சேர்ந்த 8 பேர் வாய்ப்பு பெற்று சுமார் 25 சதவீத அமைச்சரவையை நிரப்புகின்றனர். மதுரை மாவட்டத்தில் திமுக 5 இடங்களிலும் அதிமுக 5 இடங்களிலும் வென்றன. மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல்ராஜனின் மகன் மட்டுமின்றி ஸ்டாலின் குடும்பத்து உறவினரும் கூட. இந்த முக்கியத் துவத்துடன் அவர் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மதுரை கிழக்கு தொகுதி எம்எல்ஏ பி.மூர்த்தி வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட் டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் திமுகவின் பல மாநாடுகள், கூட் டங்கள், தேர்தல்களை முன்னின்று வெற்றிகரமாக நடத்தியவர். ஸ்டாலின் மட்டுமின்றி இவரது மகன் உதயநிதி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவருடனும் நெருக்கமாக பழகி வருபவர். சொந்தச் செல்வில் கட்சி பணிகளை கவனிப்பதுடன், கட்சியினரை அரவணைத்து செல்வதில் தேர்ந்தவர் என்பதால், மதுரை மாவட்டத்தில் கட்சி பணிகளை கவனிக்கும் நோக்கில் இவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் வெற்றிகளை பெற்று வருபவர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி. ஏழு தொகுதிகளை கொண்ட இம்மாவட்டத்தில் 4 தொகுதிகளில் திமுக வென்ற நிலையிலும் மூத்த நிர்வாகிகள் என்ற அடிப்படையில் யாரையும் விட்டுக்கொடுக்க முடியாத நிலையில் 2 பேருக்கும் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. சக்கரபாணி சபாநாயகர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில் அமைச்சராக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதிகளில் 6-ல் திமுக வென்றது. இம்மாவட்டத்தில் கட்சிரீதியாக மாவட்ட செயலாளர்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய 2 பேரும் அமைச்சர்களாகியுள்ளனர். தங்கம் தென்னரசு மு.கருணாநிதி குடும்பத்துக்கு நெருக்கமானவர். தந்தை தங்கப்பாண்டியன் மறைவினால் அரசியலுக்கு வந்த தங்கம் தென்னரசு அமைச்சராவது 2-வது முறை. கட்சியில் மூத்தவர் என்ற அடிப்படையில் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கட்சியினரை அரவணைத்துச் செல்வதில் வல்லவரான சாத்தூர் ராமச்சந்திரன் ஸ்டாலினுக்கும் மிகவும் நெருக்கமானவர். 2 பேரும் முக்கியமானவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றது. முதுகுளத்தூர் தொகுதியில் வென்ற ராஜகண்ணப்பன் போக்குவரத்துத் துறை அமைச்சராக்கப்பட்டுள்ளார். தனி இயக்கம் தொடங்கி, திமுக, அதிமுக என மாறி மாறிச் சென்றார். 2020-ல் மீண்டும் திமுகவில் இணைந்தார். யாதவர் சமுதாயத்தை சேர்ந்த ராஜ கண்ணப்பனுக்கு அவர் சார்ந்த சமுதாய மக்களிடம் நல்ல செல்வாக்கு உள்ளது. ராமநாதபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற காதர்பாட்சா முத்துராமலிங்கத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என பேசப்பட்டது. இவர் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியுள்ளதால், சீனியர் என்ற அடிப்படையில் ராஜகண்ணப்பனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட திமுக செயலாளரான கே.ஆர்.பெரியகருப்பன் தொடர்ந்து திருப்பத்தூர் தொகுதியில் 4 முறை வென்றுள்ளார். முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை செய்யப்பட்ட சமயத்தில் கட்சிக்கு விசுவாசமாக இருந்து கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுத்தவர். சீனியர் என்பதால் 2-வது முறையாக அமைச்சர் வாய்ப்பை பெற்றுள்ள இவருக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
6 மாவட்டங்களில் 8 பேருக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது திமுகவினருக்கே ஆச்சரியத்தை அளித்துள்ளது. நிதி, போக்குவரத்து, வணிகவரி, வருவாய், கூட்டுறவு, உணவு, ஊரக வளர்ச்சி, தொழில் என முக்கிய துறைகளையும் பெற்றுள்ளது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த 6 மாவட்டங்களில் 6 பேர் மட்டுமே அமைச்சர்களாக இருந்தனர்.