Published : 02 Dec 2015 10:09 AM
Last Updated : 02 Dec 2015 10:09 AM

தாமிரபரணி ஆற்றில் மீண்டும் வெள்ளம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் கடனா, ராமநதி, கருப் பாநதி, குண்டாறு, நம்பியாறு, அடவிநயினார், கொடுமுடியாறு ஆகிய 7 அணைகள் நிரம்பிவிட்டன. இந்த அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மாவட்டத்தின் பிரதான பாசன அணையான பாபநாசம் நிரம்பும் தருவாயில் உள்ளது. 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட இந்த அணை நீர்மட்டம் நேற்று காலை யில் 139 அடியானது. மதியம் 140 அடியை தாண்டியது. அணைக்கு வினாடிக்கு 2,829 கன அடி தண்ணீர் வருகிறது. மழை நீடிக்கும் நிலையில் இந்த அணை நாளை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே நிரம்பியுள்ள கடனா அணையில் இருந்து சுமார் 500 கன அடி தண்ணீரும், ராமநதி அணையில் இருந்து 200 கன அடி தண்ணீரும் உபரியாக ஆற்றில் விடப்பட்டுள்ளது. பாபநாசம் உபரிநீரும் தாமிரபரணியில் வரும் என்பதால், கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச் சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் உள்ள பல்வேறு குளங்களும் நிரம்பி வழி கின்றன. களக்காடு அடுத்த படலையார்குளம் உடையும் அபாயம் ஏற்பட்டதால், மணல் மூட்டைகளை அடுக்கி பொதுப் பணித்துறையினர் சீரமைத்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் பெய்த மழையால் 3 வீடுகள் இடிந்துள்ளன. திருநெல்வேலி பேட்டை மாநகராட்சி மகளிர் மேல் நிலைப்பள்ளியில் ஒரு வகுப் பறையின் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அந்த வகுப் பறையை மூடுவதற்கு மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x