Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள மாங்குனாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார்(43). இவர், வம்பன் 4 சாலை கடைவீதியில் டீ கடை நடத்தி வரு கிறார். சமூக ஆர்வலரான இவர், கடந்த 2018-ல் கஜா புயல் வீசிய சமயத்தில் தனது கடை யில் வாடிக்கையாளர்கள் நிலு வையில் வைத்திருந்த கடன் தொகையான ரூ.28 ஆயிரத்தை தள்ளுபடி செய்தார். இதைத் தொடர்ந்து, மரக்கன்றுகள் வழங்குதல், கரோனா பரவலைத் தடுப்பதற்காக கபசுர குடிநீர் விநியோகித்தல் போன்ற பணி களை செய்து வந்தார்.
இந்நிலையில், டெல்லியில் கரோனாவால் பாதிக்கப்பட் டுள்ள மக்களுக்கு நிதி வசூலித்து உதவி செய்வதற்காக தனது டீ கடையில் நேற்று முன்தினம் மொய் விருந்து நடத்தினார். இதற்கான அறிவிப்பை டீ கடை யில் வைத்திருந்தார். இதையடுத்து, கடைக்கு வந்தோர் இந்த அறிவிப்பை பார்த்து விட்டு, டீ அருந்தி, பலகாரங்களை சாப்பிட்ட பிறகு, குறிப்பிட்ட தொகையை அங்கு வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் போட்டுவிட்டுச் சென்றனர். இதன் மூலம் அன்றைய தினம் ரூ.14,452 வசூலானது. அதன்பிறகு, இதுகுறித்து தகவலறிந்த மேலும் சிலர் நேற்று ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் நேரிலும், சிவக்குமாரின் வங்கிக் கணக்கிலும் செலுத்தினர். அதன்படி நேற்று வரை ரூ.22 ஆயிரம் வசூலானது.
இந்தத் தொகையை ஆட்சியர் வழியாக டெல்லி அரசுக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்த சிவக்குமார், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பின்னொரு நாளில் மொய் விருந்து நடத்தி நிதி வசூலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT