

புதிய வகை வைரஸ் தாக்குதலுக்குள்ளான இறால் பண்ணைகளை ஆய்வு செய்து, நோய் பாதிப்பு குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும் என இறால் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரை உள்ளது. இதனால், இயற்கையாகவே கடல் வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கு உகந்த பகுதியாக நாகை மாவட்டம் அமைந்து உள்ளது. அதனால், ஏராளமான விவசாயிகள், மீன், இறால், நண்டு பண்ணைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு மாவட்ட மீன்வளத் துறை மூலமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வேளாங்கண்ணி, விழுந்தமாவடி, கருங்கண்ணி, பாப்பாக்கோவில் ஏறும் சாலை, தெற்கு பொய்கைநல்லூர், வடக்கு பொய்கைநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பண்ணைக் குட்டைகளை அமைத்து, உவர்நீர் இறால் வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அருகில் உள்ள மரக்காணம் பகுதியில் இறால் குஞ்சு பொரிப்பகத்தில் இருந்து இறால் குஞ்சுகளை வாங்கிவந்து, இறால்களை வளர்ப்பது வழக்கம். தற்போது, பண்ணைக்குட்டைகளில் குஞ்சுகளைவிட்டு 25 நாட்களே ஆன நிலையில், திடீரென்று புதிய வகை வைரஸ் தாக்கி இறால்கள் இறந்து வருகின்றன.
இதுவரை வெண்புள்ளி வைரஸ், சிவப்பு வைரஸ் போன்றவற்றால், இறால்கள் உயிரிழந்து வந்த நிலையில், தற்போது புதிய வகை வைரஸ் தாக்கியுள்ளதால், விவசாயிகள் நிலைகுலைந்து போயுள்ளனர். இதனால் நாகப்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், ரூ.50 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
வங்கிக் கடன், நகைக் கடன் மற்றும் தனியாரிடம் கடன் பெற்று இறால் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் கடனை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்கள். மேலும், அண்டை மாநிலமான ஆந்திராவில், இறால் வளர்ப்புக்காக மானிய விலையில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.2.50-க்கு வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக மின்சார வாரியம் ரூ.7.50 கட்டணம் வசூலிக்கிறது. இதனாலும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருவதாக இறால் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இறால் விவசாயிகள் மேலும் கூறியது:
அந்நிய செலாவணியை ஈட்டித்தருவதில் இறால் விவசாயிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். எனவே, ஆந்திர அரசு இறால் விவசாயிகளுக்கு வழங்குவதுபோல, தமிழக அரசும் எங்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். புதிய வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இறால் விவசாயிகளுக்கு மீன்வளத் துறை மூலமாக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
மேலும், இறால் பண்ணைகளை ஆய்வுசெய்து, நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும், நோய் பாதிப்பு ஏற்பட்ட இறால்களை மீட்கவும் ஆலோசனை வழங்க மாவட்டந்தோறும் நிபுணர் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இறால் வளர்ப்பு தொழிலை காப்பீடு செய்ய காப்பீட்டு நிறுவனங்கள் முன்வர வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுதொடர்பாக நாகை மாவட்ட மீன்வளத் துறை அலுவலர்களை தொடர்புகொண்டு கேட்டபோது, “தெற்கு பொய்கைநல்லூர் இறால் பண்ணையில் இருந்துதான் முதல் புகார் வந்தது. அதையும், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகளையும் ஆய்வு செய்தபோது, இறால்களில் புதிய வகை வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான அறிக்கையுடன் இறால் மாதிரியை பரிசோதனைக்காக அனுப்பி உள்ளோம். இந்த நோயை அழிக்க எவ்வகை மருந்து பயன்படுத்தலாம் என தகவல் வந்ததும், அந்த மருந்துகளைப் பயன்படுத்த உடனடியாக இறால் விவசாயிகளுக்கு பரிந்துரைக்கப்படும்” என்றனர்.