

சிவகங்கையில் உள்ள தினமலர் நாளிதழ் கிளை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
சிவகங்கையில், மதுரை - தொண்டி சாலையில் நகராட்சி அலுவலகம் எதிரில் தினமலர் கிளை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.
இங்கு இரவில் பணியாளர்கள் தங்கியிருந்தனர். சுமார் 1 மணியளவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பெட்ரோல் வாசனை வந்துள்ளது. பின்னர், அதிகாலையில் பணியாளர்கள் பார்த்தபோது அலுவலகத்தின் முன்புறமுள்ள இரும்புக் கதவில் தீப்பற்றி எரிந்ததற்கான தடயங்கள் இருந்தன. அருகில் இரண்டு மதுபாட்டில்களும் கிடந்தன.
இதுதொடர்பாக சிவகங்கை நகர் போலீஸில் புகார் தெரிவிக் கப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். துரை சம்பவ இடத்தை பார்வை யிட்டு விசாரணை செய்தார். மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ராமசாமி தலைமையில் தனிப் படை போலீ ஸார் விசாரித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்பு அதிமுக வைச் சேர்ந்த நகர் நிர்வாகிகள் தலைமையில் சிலர் தினமலர் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்றனர். அவர்களுக்கு இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.