தோல்வியில் விலகி ஓடும் கோழை, துரோகி: மகேந்திரன் மீது கமல்ஹாசன் தாக்கு

தோல்வியில் விலகி ஓடும் கோழை, துரோகி: மகேந்திரன் மீது கமல்ஹாசன் தாக்கு
Updated on
1 min read

சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வி அடைந்ததை அடுத்து, கமல்ஹாசனின் செயல்பாட்டில் ஜனநாயகம் இல்லை என்று கூறிய துணைத் தலைவர் மகேந்திரன், கட்சியிலிருந்து விலகினார். அவரது விலகலை கமல்ஹாசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெரும் கனவை முன்வைத்து, முதலாவது சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்தித்தோம். ஒரு பெரிய போரில் திறம்படச் செயல்படும் களத்தில் எதிரிகளுடன், துரோகிகளும் கலந்திருந்தார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டோம். “துரோகிகளைக் களையெடுங்கள்” என்பதுதான் அனைவரின் ஒருமித்த குரலாக இருந்தது. அப்படி களைய வேண்டிய பட்டியலில் முதல் நபராக இருந்தவர் மகேந்திரன்.

கட்சியில் ஜனநாயகம் இல்லை என்கிறார். ஜனநாயகமும் சமயங்களில் தோற்றுப் போகும் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் இவர்தான். முகவரியைக் கொடுத்தவர்களின் முகங்களையே எடுத்துக்கொள்ளத் துணிந்தார். கட்சிக்காக உழைக்கத் தயாராக இருந்த பல நல்லவர்களைத் தலையெடுக்க விடாமல் செய்தது இவரது சாதனை. நேர்மை இல்லாதவர்களும், திறமை இல்லதவர்களும் வெளியேறும்படி மக்கள் நீதி மய்யத்தின் கதவுகள் திறந்தே இருக்கும் என்பதை அனைவரும் அறிவர்.

தன்னுடைய திறமையின்மையையும், நேர்மையின்மையையும், நீதியின்மையும், தோல்வியையும் அடுத்தவர் மீது பழி போட்டு அனுதாபம் தேட முயல்கிறார். தன்னை எப்படியும் நீக்கி விடுவார்கள் என்பதைத் தெரிந்துகொண்டு புத்திசாலித்தனமாக விலகிக் கொண்டார். ஒரு களையே தன்னைக் களையென்று புரிந்துகொண்டு தன்னைத் தானே நீக்கிக் கொண்டதில் உங்களைப் போலவே நானும் மகிழ்கிறேன்.

இனி நம் கட்சிக்கு ஏறுமுகம்தான். என்னுடைய வாழ்க்கையில் அனைத்து விஷயங்களுமே வெளிப்படையானவை. நான் செய்த தவறை மறைக்கவோ, மறுக்கவோ ஒருபோதும் முயன்றது இல்லை. என் சகோதர சகோதரிகளான மக்கள் நீதி மய்யத்தின் குடும்ப உறுப்பினர்களுக்கு, மனம் தளர வேண்டாம் என ஆறுதல் சொல்ல வேண்டியதில்லை, உங்களின் வீரமும் தியாகமும் ஊர் அறிந்தவை.

தோல்வியின் போது கூடாரத்தைப் பிய்த்துக்கொண்டு ஓடும் கோழைகளைப் பற்றி நாம் ஒருபோதும் பொருட்படுத்தியதில்லை. கொண்ட கொள்கையில், தேர்ந்த பாதையில் சிறிதும் மாற்றம் இல்லை. மக்களுக்காகக் களத்தில் நிற்போம்”.

இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in